

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போதிருந்தே மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. குறிப்பாக இம்முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அதிமுகவின் மூத்த அரசியல் நிர்வாகி செங்கோட்டையன் தவெக-வில் இணைந்திருப்பது, அக்கட்சிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுகவுடன் இணைய இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஒருவேளை ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்து விட்டால், அது அக்கட்சிக்கு பலமாகவே பார்க்கப்படும். இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதில் அதிமுக தற்போதைக்கு தீர்க்கமான முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி கூட்டணி காட்சிகளுக்கு 100 இடங்களை ஒதுக்கி விட்டு, மற்ற 134 இடங்களில் அதிமுக நேரடியாக போட்டியிட இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றியை பெறவில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணி 23.05% ஓட்டுகளைப் பெற்றது. இது தவிர 28 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிந்ததால், இவ்விரண்டு பெரிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் நிச்சயமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வென்றிருக்கும் எனக் கூறப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பாஜக கிட்டத்தட்ட 60 தொகுதிகளுக்கும் மேல் கேட்டிருப்பதால், தற்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக. இதன்படி பாஜக-க்கு 65, பாமக-வுக்கு 30 மற்றும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் என மொத்தம் 100 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 134 தொகுதிகளில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இணைவது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் பாமக மற்றும் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தேமுதிக-வுக்கு 18 இடங்கள் ஒதுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பில்லை என அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். ஒருவேளை அதிமுக கூட்டணியின் தவெக இணைந்து விட்டால், தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு வலிமையான கூட்டணியாக அதிமுக கூட்டணி இருக்கும் என்பது சந்தேகமில்லை.
தவெக இணையும் பட்சத்தில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கணிசமாக குறைக்கப்படும் எனத் தெரிகிறது.