

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இப்போதே தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. வரப்போகும் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதேசமயம் ஆட்சிப் பொறுப்பை தன்வசப்படுத்த அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கரூர், புதுச்சேரியில் மக்களை சந்தித்து பேசிய விஜய் நாளை மறுதினம், ஈரோட்டில் மக்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, ஈரோட்டில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே அதிமுக சார்பில் தவெக-வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்தன. இருப்பினும் இந்தக் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சுமூகமான முடிவு எட்டாத நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.
கடந்த வாரம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி குறித்து தீர்க்கமான முடிவை அறிவித்தார். இதன்படி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப் போவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், தனித்தனியே போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர்.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக 60 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், நேற்று முதல் அதிமுகவில் தேர்தல் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.
பாஜகவை தொடர்ந்து தவெக-வுடன் கூட்டணி வைக்கவும் அதிமுக விரும்புகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா என்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இனிமேல் தான் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்களா என்பதும் சந்தேகம் தான்.
இருப்பினும் தவெக-வில் தற்போது செங்கோட்டையன் இருப்பதால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. அதிமுகவில் இணைவதா அல்லது புதுக் கட்சியைத் தொடங்குவதா என்பது குறித்து, தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கவுள்ளார் ஓபிஎஸ்.
இந்நிலையில் இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
இந்த சந்திப்புக்கு பின் கூட்டணி குறித்து அவர் தெரிவிக்கையில், “எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்க முடிவு செய்திருக்கிறோம். கூட்டணி வைத்த பிறகு வெகு விரைவில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன், அதிமுக கூட்டணி வைப்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி வருமா வராதா என்பது பற்றி கூறுவதற்கு என்னிடம் பதில் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.