
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு அதிகரித்ததன் காரணமாக இவற்றின் விலை உயர்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. தங்கம் பெரும்பாலும் ஆபரண நகைக்காகவும், முதலீட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நகை மற்றும் முதலீடு தவிர்த்து தொழிற்சாலைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது வெள்ளி. இதனால் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கான தேவை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
தேவை அதிகரித்ததன் காரணமாகத் தான் லண்டனில் உள்ள ஸ்பாட் மார்க்கெட்டில் வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக சர்வதேச அளவில் வெள்ளியின் விலை உயர்ந்து கொண்டே போனது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் லண்டனுக்கு வெள்ளியை ஏற்றுமதி செய்துள்ளன. இதன் காரணமாக அங்கு வெள்ளி பற்றாக்குறை தற்போது சீரான நிலைக்கு வந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் லண்டன் ஸ்பாட் மார்க்கெட்டில் வெள்ளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாகவே, சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அதிக பொருட்செலவில் வெள்ளி இறக்குமதி செய்யவும் விற்பனையாளர்கள் முன்வந்தனர். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடம் இருந்து கிட்டத்தட்ட 1,000 டன் வெள்ளி லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவின் வெள்ளி லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே கடும் போட்டி நிலவி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பற்றாக்குறை மற்றும் பண்டிகை கால தேவை ஆகியவற்றின் காரணமாக வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை சந்தித்துள்ளது. பற்றாக்குறையை விரைந்து தீர்க்காவிட்டால், இனி வரும் காலங்களில் வெளளி விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு ட்ராய் அவுன்ஸ் (31 கிராம்) வெள்ளி ரூ.4,800 ஆக இருந்தது. லண்டனில் 1,000 டன் வெள்ளி இறக்குமதியானதும், வெள்ளியின் விலை கிட்டத்தட்ட ரூ.200 குறைந்து ஒரு ட்ராய் அவுன்ஸ் ரூ.4,600 க்கு விற்பனையானது. லண்டன் நகரில் குறுகிய காலத்திற்கான வெள்ளி கடன் வட்டி விகிதங்களும் தற்போது குறைந்துள்ளன.
லண்டனில் உள்ள வெள்ளி சேமிப்பு கிடங்கில், கிட்டத்தட்ட 83% வெள்ளி இடிஎப்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் வெள்ளி விலையைக் குறைத்ததில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு முக்கிய பங்குண்டு. இந்தியாவில் வெள்ளி நகைகள் அதிகம் விற்பனையாவதால், தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் வெள்ளி விலை இந்தியாவில் குறையுமா என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.