

அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலின் வகையைப் பொறுத்து லிட்டருக்கு ₹2 முதல் ₹4 வரை விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று (நவம்பர் 12) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரதான அமுல் பாக்கெட் பால் வகைகளின் விலையில் சுமார் 4% முதல் 5% வரை இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனம் அமுல். இந்தியாவிலேயே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் இந்நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இது இந்தியாவில் மட்டுமின்றி 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமுல் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
தினமும் 31 மில்லியன் லிட்டர் பாலை சேகரிப்பதுடன், பால், வெண்ணைய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட தயாரிப்புகளை விநியோகம் செய்து வருகிறது.இதுபோன்ற சூழலில், அமுல் பால் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி, அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளது. 3% கொழுப்புச் சத்து கொண்ட அமுல் தாஜா 6 டோண்டு பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்து கொண்ட அமுல் கோல்டு பால் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை விவரங்கள்:
இந்த விலை திருத்தம் அமுல் தாஸா (Amul Taaza), அமுல் கோல்ட் (Amul Gold), அமுல் சக்தி (Amul Shakti) மற்றும் அமுல் டீ ஸ்பெஷல் (Amul Tea Special) உள்ளிட்ட முக்கிய பால் வகைகளைப் பாதிக்கிறது.
அமுல் தாஸா (Toned Milk): லிட்டருக்கு ₹2 உயர்த்தப்பட்டு, இனி ₹62-க்கு விற்பனை செய்யப்படும்.
அமுல் கோல்ட் (Full-Cream Milk): லிட்டருக்கு ₹4 உயர்த்தப்பட்டு, இனி ₹80-க்கு விற்பனை செய்யப்படும்.
மே 2026-க்குப் பிறகு அமுல் நிறுவனம் செய்யும் முதல் பால் விலை உயர்வு இதுவாகும். டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் விற்பனை செய்யும் 'மதர் டெய்ரி' (Mother Dairy) நிறுவனம், உற்பத்திச் செலவு உயர்வைக் காரணம் காட்டி பால் விலையை உயர்த்திய சில மணி நேரங்களிலேயே அமுல் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வுக்கான காரணங்கள்:
கடந்த ஒரு ஆண்டில் பால் உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கிங் ஃபிலிம் மற்றும் எரிபொருள் போக்குவரத்து ஆகியவற்றுக்கான செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மேலும் பசுந்தீவனம், உலர்தீவனம், பிண்ணாக்கு, சோளம் மற்றும் சர்க்கரைப்பாகு போன்ற கால்நடை தீவனப் பொருட்களின் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
குஜராத் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் போதிய மற்றும் சீரான மழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த கொள்முதல் விலையை வழங்கி அவர்களை ஆதரிக்கவே இந்த நுகர்வோர் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.