

கர்நாடகா முதல்வராக டி.கே.சிவக்குமார் வந்த பிறகு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான முயற்சியில் அவர் தீவிரம் காட்டிவருகிறார். இதற்கு தமிழக அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் இந்த திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குரிய காவிரி நீர்வரத்து பாதிக்கப்பட்டு, டெல்டா விவசாயமும், மக்களின் குடிநீர் தேவையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தமிழகத்தின் உரிமை நிலைநிறுத்தப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் பல்வேறு கட்டங்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியும் இத்திட்டத்திற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
காவிரி நதிநீர் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, இரு மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்ட முடியாது. மேகதாது அணை இந்த சட்டத்திற்கு முரணானது என தமிழக அரசு வாதிடுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடகாவின் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் மேகதாது அணையை தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர் அன்புமணி லோகோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த லோகோவில் மேகதாது தடுத்துப்போம் என்று பதிவிடப்பட்டு உள்ளது.
மேலும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். காவிரி தொடங்கும் பிலிகுண்டுலுவில் வருகிற 1-ம்தேதி தனது பயணத்தை அவர் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்தகால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத்தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையை கட்டத் துடிக்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே வருகிற ஜூலை 1-ம்தேதி முதல் 4-ம்தேதி வரையிலான 4 நாட்கள் தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு துமல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே, இந்த பயணத்தில் என்னுடன் இணையுங்கள் என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்போம். காவிரிகாப்போம். மேகதாது அணை தடுப்போம் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தவெக அரசு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் நீதிமன்றம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் புதிய நடுவர் நீதிமன்றம் அமைத்தால் தமிழ்நாட்டின் உரிமையை இழப்பதற்கு நேரிடும் என அதிமுக பாமக மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து படிக்கின்றன .
இது நம்முடைய பிரச்சனை. இதற்காக போராட வேண்டியுள்ளது. இதுபற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஊராக நடைபயணம் சென்று அங்கெல்லாம் துண்டுபிரசுரம் வழங்க இருப்பதாகவும், இதில் இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதால் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.