
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், அணை கட்டும் முயற்சி இழுபறியில் உள்ளது. இருப்பினும் அணையைக் கட்டியே தீர வேண்டும் என்ற முனைப்பில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக ரூ.1,000 கோடி நிதியையும் ஒதுக்கியிருக்கிறது. மேலும் மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். இந்நிலையில் மேகதாது அணையைக் கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டசபையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மேலும் கூறுகையில், “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும். வழக்கமான மழை பெய்யும் நாட்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கும் தண்ணீரின் அளவை நாங்கள் குறைப்பதில்லை. அதிக மழைப்பொழிவு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக தண்ணீரைத் திறந்து விடுகிறோம்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு திறந்து விடும் தண்ணீர் போக, கிட்டத்தட்ட 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். இந்தத் தண்ணீரை வறட்சி காலத்தில் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தச் சூழலில் மேகதாதுவில் அணை கட்டுவது தமிழ்நாட்டிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆகையால் அணை கட்ட தமிழ்நாடு அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்னும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட தீவிரம் காட்டி வருகிறது கர்நாடக அரசு. மேகதாது அணையைக் கட்டினால், உபரிநீர் சேமிக்கப்பட்டு 5 மாவட்டங்களின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்க முடியும். தற்போது கர்நாடகாவில் பாசனப் பகுதி 6% அதிகரித்துள்ள நிலையில், அணையைக் கட்டினால் உபரி நீர் விவசாயத்திற்கும் பயன்படும் என கர்நாடக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் மேகதாது அணையைக் கட்டுவதற்கு நிலம் கண்க்கீட்டுப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்களிடம் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.