மீண்டும் பயமுறுத்தும் கோவிட்-19! ஆந்திராவில் கொரோனாவுக்கு 2 பேர் பலி..!!

ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில் பரவும் கொரோனா; மரபணு சோதனைக்காக புனே ஆய்வகத்திற்கு மாதிரிகள் விரைவு; முகக்கவசம் கட்டாயமாகிறது.
கோவிட்-19 தொற்று
கோவிட்-19 தொற்று
Updated on

ஆந்திர பிரதேசத்தில் கோவிட்-19 தொற்றால் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மேலும் 8 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் மாநிலம் முழுவதும் சுகாதார துறை சார்பில் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில், ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவர், காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (CMC) சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், கடுமையான உடல்நல கோளாறுகள் காரணமாகக் கடப்பா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், கோவிட்-19 தீவிரச் சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கோவிட்-19, சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் வேகமாகப் பரவி, 2020 மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பால் உலகளாவிய பெருந்தொற்று (Pandemic) என அறிவிக்கப்பட்டது. இந்த நோயினால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளுடன் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு , சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் சார்ந்த அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டு வர பெரும் தடுப்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் அந்த பாதிப்பு அகற்றப்பட்டது.

இந்நிலையில் ஆந்திராவில் கோவிட்-19 மீண்டும் தலைதூக்கியுள்ளதாக வரும் செய்திகள் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடந்த சில வாரங்களில் எட்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து, சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் கடப்பா மருத்துவ கல்லூரியை சேர்ந்த 25 வயது மருத்துவ மாணவர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி கண்டுகொள்ளப்பட்ட புதிய நோய்த்தொற்றுகளை தொடர்ந்து, சுகாதாரத் துறை சிறப்பு விரைவு மீட்புக் குழுக்களை அந்த மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 நபர்களிடமிருந்து அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் 18 மாதிரிகளின் முடிவுகள் எதிர்மறையாக (Negative) வந்துள்ளன; மீதமுள்ள சோதனைகளின் முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன.

corona testing
corona testingimage source:hindustantimes

மேலும் அந்த மாவட்டத்தில் தற்போது எட்டு கோவிட்-19 பாதிப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக, சமீபத்தில் நடைபெற்ற மாவட்டப் பஞ்சாயத்துக் கூட்டத்தில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வைரஸின் வகையைக் கண்டறியவும், அதன் பரவல் முறையைப் புரிந்துகொள்ளவும், மரபணு வரிசைப்படுத்துதலுக்காக மாதிரிகள் புனேவில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கடப்பாவில் நோய்த்தொற்று மேலும் பரவுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திரப் பிரதேச மாவட்டப் பொறுப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கோவிட்-19 வழிகாட்டுதல்களைக் கடுமையாக அமல்படுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனைகள் மற்றும் பிற பொது இடங்கள் உட்பட, மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குமாறும் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை காட்டும் நபர்களைக் கண்டறிந்து, தேவைப்படும் இடங்களில் அவர்களை தனிமைப்படுத்தும் மையங்களுக்கு மாற்றுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு மாற்றப்பட வேண்டும், மற்றவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடப்பாவில் ஏற்பட்ட தொற்று மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் கோவிட்-19 தயார்நிலை எச்சரிக்கையை மாநில சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கண்காணிப்பு, பரிசோதனை, அறிக்கை அமைப்புகள் மற்றும் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

போதுமான படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆதரவுடன், தனிமைப்படுத்தும் வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், ஆனால் எச்சரிக்கையாக இருக்குமாறும், சுகாதாரத்தைப் பேணுமாறும், கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறும், கோவிட் போன்ற அறிகுறிகள் தோன்றினால் மருத்துவ உதவியை தாமதிக்காமல் உடனடியாக நாடுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆந்திரா நமது அண்டை மாநிலம் என்பதால், அங்கிருந்து தமிழகம் வரும் நபர்களிடம் சற்றே சமூக இடைவெளியைப் பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும். நாமும் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை (Sanitizers) உபயோகிப்பது நல்லது. உடலில் தோன்றும் சிறிய அளவிலான சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளையும் அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரை அணுகி எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்கின்றனர் தமிழக மருத்துவர்கள்.

இதையும் படியுங்கள்:
வருங்கால மனைவிக்காக 200 கோடி ரூபாய் மதிப்பில் காதல் கோட்டை கட்டும் பிரபாஸ்..!!
கோவிட்-19 தொற்று
இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயை விரட்டும் காலை உணவு; எடையை குறைக்கும் மாலை பழக்கங்கள்!
கோவிட்-19 தொற்று
logo
Kalki Online
kalkionline.com