

உலகளவில் இன்று ஸ்மார்ட்போன் பயனர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து விட்டது. குறிப்பாக இந்தியாவில் இந்த எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகம். ஸ்மார்ட்போன் பயன்பாடு எந்த அளவிற்கு அதிகரித்துள்ளதோ, அதே அளவிற்கு டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
குறுஞ்செய்திகளில் லிங்க் அனுப்பி பணத்தை ஏமாற்றுவது முதல் டிஜிட்டல் அரெஸ்ட் வரை ஸ்மார்ட்போனை மையமாகக் கொண்டே நடக்கிறது. விலை உயர்ந்த போன்களில் தான் அதிக பாதுகாப்பு இருக்கும் என பொதுமக்கள் பரவலாக நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்த நம்பிக்கை பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம், தற்போதைய நிலவரப்படி விலையுயர்ந்த ஐபோன்களில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கூகுள் மற்றும் யூகோவ் (YouGov) ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களிடம் ஒரு முக்கிய ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் யாருக்கு அதிக ஸ்பேம் செய்திகள் வருகின்றன; டிஜிட்டல் மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்ற கண்ணோட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆம், விலையுயர்ந்த ஆப்பிள் ஐபோன் வாடிக்கையாளர்கள் தான் ஸ்பேம் செய்திகளால், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
கூகுள் நடத்திய இந்த ஆய்வில் இந்தியா, பிரேசில் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் கலந்து கொண்டனர். ஆண்ட்ராய்டு பயனர்களைக் காட்டிலும், ஐபோன் பயனர்களுக்கு அதிகளவில் ஸ்பேம் குறுஞ்செய்திகளும், போலி இணைப்புகளும் வருவதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் பயனர்கள் டிஜிட்டல் மோசடிகளில் சிக்குவதற்கு முக்கிய காரணமாக இது பார்க்கப்படுகிறது. மேலும் ஐபோனைக் காட்டிலும், ஆண்ட்ராய்டு போனுக்கு வரும் ஸ்பேம் குறுஞ்செய்திகள் 58% குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற ஆண்ட்ராய்டு பயனர்கள் பலரும், தங்களுக்கு ஸ்பேம் குறுஞ்செய்திகள் எதுவும் வருவதில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள 2 தளங்களின் இயல்புநிலைப் பாதுகாப்பு மற்றும் செய்தி வடிகட்டுதல் அமைப்புகளே இதற்கு காரணம். மேலும் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் அம்சமும் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது.
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில், செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏஐ உதவியின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வரும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் குறுஞ்செய்திகள், போலி இணைப்புகள் மற்றும் அழைப்புகள் தடுக்கப்படுகின்றன.
விலையுயர்ந்த ஆப்பிள் ஐபோன்களை விட ஆண்ட்ராய்டு போன்களே சிறந்தது என்ற உண்மை இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் தான் அதிகப் பாதுகாப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.