

‘வீ த லீடர்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த ஜூன் மாதம் ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி உள்ளார். இதில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இந்திய காவல் பணியில் (IPS) பணியாற்றிய அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்து, கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார். தமிழக பாஜகவை மாநில அரசியலின் மையப்புள்ளியாக மாற்றிய தலைவர்களில் அண்ணாமலையும் ஒருவர் என்று சொல்லலாம். அவரது தலைமையில் பாஜக பல்வேறு அரசியல் விவாதங்களின் மையமாக இருந்தது.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் சந்திக்க வேண்டும் என்ற பாஜக மேலிட முடிவு மற்றும் கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் மறுக்கப்பட்டது அவரை பாஜவில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளியது. அதோடு அண்ணாமலை மாநில தலைவராக இருந்தால் பாஜக கூட்டணியில் இணையமாட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் செய்திகள் வெளியானது.
இதனால் அண்ணாமலை பாஜக மேலிடம் மீது அதிருப்தியில் இருந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், கடந்த ஜூன் 2-ம்தேதி அவர் தனது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை, கடந்த ஜூன் மாதம் 5-ம்தேதி ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார்.
இந்த புதிய மக்கள் இயக்கத்தை, எதிர்காலத்தில் ஒரு பிராந்திய அரசியல் கட்சியாக மாற்றவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த இயக்கத்தில் தற்போது வரை சுமார் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12-ம்தேதி அன்று பொள்ளாச்சியில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளதாகவும் வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரையும், புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை புதிய கட்சி :
கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து வரும் செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார்.
கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருப்பதாகவும் அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்த பிறகு, இது முறைப்படியான அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவசர அவசரமாக ஆகஸ்ட் மாதத்திலேயே கட்சியின் பெயர் மற்றும் கொடியை அவர் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒருவேளை வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பதற்காகவே அவர் புதிய கட்சியைத் தொடங்கக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.