தமிழ்நாட்டில் 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல 2031லும் மாற்றம் ஏற்படும் - அண்ணாமலை..!

அண்ணாமலையின் 'வீ த லீடர்ஸ்' மாநாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
அண்ணாமலை
அண்ணாமலைimage credit-timesofindia.indiatimes.com
Updated on

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த ஜூன் மாதம் ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி உள்ளார். இதில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், அண்ணாமலை தொடங்கி உள்ள வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநில மாநாடு கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். திடலுக்கு வெளியே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அண்ணாமலை மேடையில் அமராமல் கீழே தொண்டர்களுடன் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் பங்கேற்று போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவது, மாவட்டந்தோறும் போதை தடுப்புக் குழுவை உருவாக்க வேண்டும், கல்வி நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் காலையிலேயே மது அருந்துவதை தடுக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம். 38 நாள்களில் 19 லட்சம் பேர் அமைப்பில் இணைந்துள்ளதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தன்னெழுச்சியாக இந்த அமைப்பில் இணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அமைப்பில் இணையுமாறு யாரிடமும் கேட்கக் கூடாது என்றும் மக்கள் நமது வேலையைப் பார்த்து நம்முடன் இணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

‘இந்த அமைப்பு மூலமாக தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. தற்போது இருப்பவர்களில் நிறைய பேர் புது எம்எல்ஏக்கள். அண்ணன் செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள். அவர்கள் தடுமாறத்தான் செய்வார்கள். எனவே, நல்ல சமூகமாக இருந்தால் நாம் அவர்களை தூக்கி பிடித்துதான் விட வேண்டுமே தவிர கீழே அழுத்தவிடக் கூடாது.

இந்த அமைப்பு ஆரோக்கியமான அரசியல் மூலம் சொல்ல வேண்டும். கேட்கவில்லை எனில் அப்புறம் என்ன நடக்குது என்பது வேறு. நமக்கு அதிகார வெறி இல்லை.

தவெக தடுமாறும் போது.. தூக்கி பிடித்து உதவ வேண்டும். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம் என்று அவர் பேசும்போது கூட்டத்தில் விசில் பறந்தது.

'வீ த லீடர்ஸ்' மாநாட்டு
'வீ த லீடர்ஸ்' மாநாட்டு மேடையில் விழுந்து வணங்கிய அண்ணாமலைimage credit-newstamil24x7digital

அண்ணாமலை, இந்த இயக்கத்தை தொடங்கியபோது, முதலமைச்சர் விஜய்க்கு எதிரான சக்தியாக புதிய அரசியல் கட்சியை உருவாக்க போகிறார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது விஜய்யை ஆதரிப்பதாக பேசியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு தவெக அரசு ரூ.80,000 கோடிக்கும் அதிகமாகத்தான் கடன் வாங்கப்போகிறது. அடுத்த ஆண்டும் இதே நிலைமைதான். ஆனால் இந்த ஆட்சி முடிவதற்குள் நிச்சயம் 15 லட்சம் கோடியாக கடன் அதிகரித்திருக்கும் என்றார்.

அரசு பள்ளியை நோக்கி செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது; அரசு பள்ளிகள் உலகத் தரத்தில் இருக்க வேண்டும். உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சியே நமது நோக்கம் என்றார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: அடுத்த தேர்தலில் நம் கட்சி நிச்சயமாக போட்டியிடும்! அண்ணாமலை அதிரடி.!
அண்ணாமலை

மேலும், இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதே நோக்கம்; பாஜகவின் மீது எனக்கு கோபம் இருந்ததா எனக் கேட்டால், இருந்தது; இறுமாப்புடன் எப்போதும் சொல்வேன் நான் ஒரு தேசியவாதி. எனது மதத்தையும், சாதியையும் வீட்டில் வைத்துவிட்டு வருகிறேன்; எல்லா காலத்திலும் மதத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து பட்டதுபோதும்; அந்த சாக்கடை அரசியல் நமக்கு வேண்டாம்.

‘We The Leaders’ அமைப்பு அடுத்த 6 மாத காலம் 6 முக்கிய பிரச்னைகளை எடுத்து பேச இருக்கிறோம்; அடுத்த 6 மாதம் நமக்கான இலக்கு தெள்ளத் தெளிவாக உள்ளது. நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த மேடை உள்ளது என்றார். 38 நாட்களில் 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்; இது என் குடும்ப கட்சி இல்லை. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான்.

சேவை, மாற்றம் என்ற வார்த்தைகளில் நாம் இணைந்திருக்கிறோம்; சரியான நேரத்தில் 'We The Leaders' அமைப்பு அரசியல் கட்சியாக மாறும். நாம் எப்போதும் நாமாக இருப்போம், அதனால் தான் நம் அமைப்பிற்கு 'We The Leaders' என பெயர் வைத்துள்ளோம். 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல் 2031-லும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஜூலை முதல் கதையே மாறப் போகுது.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் வீடியோ.!
அண்ணாமலை

இதில் மாநாட்டில் நடந்த மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக அங்கிருந்த சேர்களை அடுக்கி வைத்து விட்டு, கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் சேகரித்தனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com