

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடப் போவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய்க்கு ரஜினி தான் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பேசுபொருளாகவே மாறியுள்ளார். கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய் சட்டமன்ற தேர்தலில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் விஜய்யால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றே தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அக்கட்சியில் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் விஜய்க்கு பக்க பலமாக இருக்கிறார். இதன் காரணமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கணிப்புகள் வெளியாகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கி விட்டார் ரஜினிகாந்த்.
அதற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, தற்போது அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் நடிகர் விஜய் சினிமாவைத் துறந்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் விஜய்க்கு ரஜினி தான் சிறந்த உதாரணமாக இருப்பார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறுகையில், “விஜய் தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு, மூன்று ஆண்டுகளில் தேர்தலை சந்தித்தால் அது வேறு. ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் மிக குறைந்த கட்டமைப்புடன், குறைந்த அளவிலான தலைவர்களை கொண்டு தேர்தலில் சாதிப்பது என்பது கடினம் தான்.
ரசிகர் மன்றங்கள் உங்களை குஷிப்படுத்தும், உற்சாகப்படுத்துமே தவிர வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளாது. இதற்கு ரஜினிகாந்த் ஒரு சிறந்த உதாரணம்.
தற்போது ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதோடு, புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைப்போம். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க, பாஜக உறுதுணையாக நிற்கும்.
கேரளா சட்டசபை தேர்தல் மட்டும் கொஞ்சம் சிக்கலாகவே இருக்கும். தென்னிந்திய மாநிலங்களில் பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது. நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக கூட்டணி நிச்சயமாக நான்கில் வெற்றியைப் பெரும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் உள்ளீட்டு ஐந்து மாநிலங்களை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக-விடம் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸின் செயல், பாஜக அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமையுமா என்பதும் தற்போது விவாதமாக மாறியுள்ளது. அதேபோல் தவெக கூட்டணியில் இன்னும் யாரும் இணையாமல் இருப்பதும், அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த சட்டமன்ற தேர்தலை விஜய் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதே, தற்போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.