பொள்ளாச்சியில் தொடங்கும் புதுப்போர்! ‘வி த லீடர்ஸ்’ அண்ணாமலையின் டார்கெட் விஜய்யா..?

‘வி த லீடர்ஸ்’ மாநாட்டிலேயே முதலமைச்சர் விஜய்யை நேரடியாக அட்டாக் செய்து பேச அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
annamalai vijay
annamalai vijay
Updated on

‘வி த லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தை ஆரம்பித்துள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை தனது முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் வரும் 12-ம்தேதி நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் அண்ணாமலை என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் தனது முதல் மாநாட்டிலேயே முதலமைச்சர் விஜய்யை நேரடியாக அட்டாக் செய்து பேச அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி தொடங்கியுள்ள ஒரு புதிய அரசியல் இயக்கம் தான் ‘வி த லீடர்ஸ்’ (We The Leaders). கடந்த ஜூன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ஒரு புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கமாகும். சாதி, வாரிசு அரசியலைத் தாண்டி, சாமானிய மக்களின் அரசியல், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலைக்கும், பாஜக உள்ளவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் நடந்து முடிந்த சட்டப்சபை தேர்தலுக்கு பின்னர் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ‘வி த லீடர்ஸ்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினார்.

தற்போது வரை இந்த இயக்கத்தில் சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்த இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததும், இது முறைப்படியான அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநில மாநாடு வரும் ஜூலை 12-ம்தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. இந்த முதல் மாநாட்டில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அண்ணாமலை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையின் ஒரே இலக்கு விஜய்யாக தான் இருக்கும்.. விஜய் எப்படி ஸ்டாலினை டார்கெட் செய்தாரோ, அதேபோல் அண்ணாமலை விஜய்யை டார்கெட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுகவை விமர்சனம் செய்து அவர்களுக்கு இலவச விளம்பரம் வாங்கி தர மாட்டார் என்றும் குறிப்பாக அதிமுகவை கண்டுகொள்ளவே மாட்டார் என்றும் கருத்து நிலவுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் ஊழலை வெறுத்த மக்கள் திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டி புதிய கட்சியான தவெகவை வெற்றி பெற செய்தனர். அந்த வகையில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பிற்கும் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது அண்ணாமலை திட்டமாகும்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும் இளைஞர்களை குறிவைத்தே அரசியல் செய்ய திட்டம் எனவும், தவெகவை எதிர்க்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அண்ணாமலை ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று அரசியலை விரும்பும் ஒட்டுமொத்த வாக்காளர்களையும், இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க வேண்டுமானால், தற்போதைய அதிகார மையமாக விளங்கும் முதலமைச்சர் விஜய்யை நேரடியாக எதிர்கொள்வதே சரியான வழி என்பதை அண்ணாமலை நன்கு உணர்ந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் களமும் இனிமேல் பழைய திராவிடக் கட்சிகளை ஓரம் தள்ளிவிட்டு, அண்ணாமலை மற்றும் விஜய் ஆகிய இரு புதிய ஆளுமைகளுக்கு இடையிலான மல்லுக்கட்டலாக மாறப்போகிறது என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அந்த வகையில் நடக்க உள்ள வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநில மாநாட்டில் சட்டம் மற்றும் நிர்வாக நடைமுறைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையின் கேள்விகளை, தமிழக அரசியலுக்கு புதியவரான முதலமைச்சர் விஜய் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்தத் தமிழகமும் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! அண்ணாமலை இயக்கத்தில் இணைகிறாரா ரஜினியின் மருமகன் விசாகன்..?
annamalai vijay

சமீபகாலமாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருகின்றனர்.

தேர்தலின் போது, தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம் மற்றும் நிர்வாக சீர்கேடு நிறைந்த ஸ்டாலின் ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர் என்று மேடைகளில் முழங்கிய தவெக தலைவர் விஜய், தற்போது அதே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிமுக முன்னாள் அமைச்சர்களைத் தன் கட்சியில் சேர்த்து வருகிறார்.

'மக்கள் பணத்தைப் பறித்தவர்களை விடமாட்டேன்' என்று கூறிவிட்டு, தற்போது அதே நபர்களைக் கட்டியணைத்துக் கட்சியில் சேர்ப்பது எந்த வகையில் முறை? அது தர்மமாகுமா? என அடுக்கடுக்கான கேள்விக் கணைகள் விஜய் நோக்கித் தொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தலைமையிலான தவெக அரசை நோக்கி அண்ணாமலை தொடுக்கப்போகும் ஒவ்வொரு அரசியல் கணைகளும், விமர்சனங்களும் இடி முழக்கத்தைப் போல மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது வெறும் புஷ்வாணமாகப் பொய்த்துப் போய் மறைந்துவிடுமா என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஜூலை முதல் கதையே மாறப் போகுது.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் வீடியோ.!
annamalai vijay

அந்த வகையில் முதலமைச்சர் விஜய் மீது அண்ணாமலை வைக்கப்போகும் ஒவ்வொரு டார்கெட்டும் இடி மாதிரி இருக்குமா? அல்லது புஷ்வாணமாகி விடுமா? என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

logo
Kalki Online
kalkionline.com