

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கினார். கடந்த ஜூன் 5-ம் தேதி youtube நேரலையில் பேசிய அண்ணாமலை வீ த லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கி, நல்ல அரசியலை முன்னெடுக்க விரும்பும் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். அதோடு வீ த லீடர்ஸ் மூலமாக அரசியல் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பிறகு பத்திரிகையாளர்கள் யாரையும் சந்திக்காத அண்ணாமலை, சற்றுமுன் யூடியூபில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீ த லீடர்ஸ் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதல் தொடங்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேசுகையில், “கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி புதிய அரசியல இயக்கத்தை கொண்டு வருவதற்கான முயற்சி குறித்து பேசி இருந்தேன். நாம் தொடங்கி வைத்த வீ த லீடர்ஸ் என்ற இயக்கத்தில் தற்போது வரை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
யாரையும் எனது இயக்கத்தில் இணையுங்கள் என்று நான் கேட்கவில்லை. அதேபோல் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களிடமும் நான் இயக்கத்தில் இணையும்படி கூறவில்லை. ஆனாலும் இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, நல்ல அரசியலை முன்னெடுக்க 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்போது இணைந்துள்ளனர். இந்தியாவிலேயே ஓடிபி முறையில் பொதுமக்களை இணைத்த ஒரு இயக்கம் வீ த லீடர்ஸ் மட்டும் தான்.
பலரும் மிஸ்டு கால் மூலமாக இயக்கத்தில் இணைத்துக் கொள்ள பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி செய்தால் இயக்கத்தில் இன்னும் நிறைய பேர் நினைவார்கள் என்றார்கள். இருப்பினும் பொதுமக்களின் கருத்து என்ன; அவர்கள் என்ன நினைக்கிறார்கள்; உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்களா களப்பணி ஆற்ற விரும்புகிறார்களா என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இதனைத் தெரிந்து கொண்டால் தான் வீ த லீடர்ஸ் இயக்கத்தை நல்லதொரு இயக்கமாக அரசியல் கட்சியாக மாற்ற முடியும். வருகின்ற ஜூலை மாதம் முதல் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும். இயக்கத்தில் இணைந்த ஆயிரக்கணக்கானோர் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும், லட்சக்கணக்கானோர் களப்பணி ஆற்ற விருப்பம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
வீ த லீடர்ஸ் இயக்கம் பொய்க்காது; பொய் சொல்லாது; நல்ல அரசியலை முன்னெடுக்கும் என்று நம்பிக்கை வைத்து இணைந்த அனைவருக்கும் நன்றி” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து வெளியேறிய பின்பு தனிக் கட்சி தொடங்கு முடிவில் வீ த லீடர்ஸ் என்ற இயக்கத்தை தற்போது அண்ணாமலை தொடங்கியிருக்கிறார். இந்த இயக்கம் வெகுவிரைவில் அரசியல் கட்சியாக மாறவுள்ளது.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அண்ணாமலை தொடங்க உள்ள கட்சி நிச்சயமாக போட்டியிடும் என்று அவர் ஏற்கனவே உறுதிபடுத்தியிருக்கிறார். தமிழக அரசியல் தளம் பரபரப்பாக இருக்கும் சூழலில் அண்ணாமலை தொடங்க உள்ள கட்சி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் தவெக தலைவர் விஜய் பெற்ற வெற்றியைப் போல் பெறுவாரா என்ற பேச்சுகளும் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன