உங்களுக்கு 8 கிராம் தங்கம் + பட்டுச்சேலை கிடைக்குமா..? – அண்ணன் சீர் திட்டம்: யாருக்கு கிடைக்கும்..?

1 சவரன் தங்கம், பட்டுச்சேலை: ஏழை பெண்களுக்கு தமிழக அரசின் 'அண்ணன் சீர்' திட்டம்!
அண்ணன் சீர் திட்டம்
அண்ணன் சீர் திட்டம்
Updated on: 

தமிழ்நாட்டில் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மகள்களின் திருமண செலவைக் குறைக்கும் நோக்கில், 'அண்ணன் சீர் திட்டம்' எனும் புதிய திருமண உதவி திட்டத்திற்கான முதல் கட்டமாக ரூ.812 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை (அக்டோபர் 5, 2026) அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் பாரம்பரிய திருமணச் சீராக 8 கிராம் (1 சவரன்) எடைகொண்ட 22 கேரட் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுச்சேலை ஆகியவை வழங்கப்பட உள்ளன.

தமிழர் பாரம்பரிய மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் 'சீர்' என்பது வெறும் பொருள் அல்ல, அது அன்பு, பாசம் மற்றும் பாதுகாப்பின் அடையாளம் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏழைப் பெண்களின் குடும்ப சுமையைக் குறைக்கவும், புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மணப்பெண்களுக்கு ஓர் அண்ணனாக அரசு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் அரசாணையின்படி, இத்திட்டத்திற்கான முதன்மைத் தகுதியாகக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமண நிகழ்வு தமிழ்நாட்டிற்குள் நடைபெற வேண்டும் என்றும், அரசாணை வெளியிடப்பட்ட அக்டோபர் 5, 2026 அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தேவையான 22 கேரட் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுச்சேலைகள் 'தமிழ்நாடு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மைச் சட்டம், 1996'-ன் கீழ் உரிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும். தங்கத்தின் விலை 'இந்தியன் புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன்' (IBJA) நிர்ணயிக்கும் நிலவரப்படி கணக்கிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கூடுதல் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் தனியாக வெளியிடப்பட உள்ளன.

'அண்ணன் சீர் திட்டத்தில்' பயனடைய விரும்புவோர் விண்ணப்பிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு விரைவில் பிரத்யேக இணையதளப் போர்ட்டலை அறிமுகப்படுத்த உள்ளது. இப்போர்ட்டல் பயன்பாட்டிற்கு வந்ததும், தகுதியான பயனாளிகள் தங்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதள முகவரி அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், வயதுச் சான்று, புகைப்படங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை தற்காலிகமாகத் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முழுமையான மற்றும் இறுதி ஆவணப் பட்டியல் அரசின் விரிவான வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே உறுதி செய்யப்படும். பொதுமக்கள் இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு சமூக நலத்துறை இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நலத்திட்டத்தை மாநிலம் முழுவதும் உடனடியாகத் தொடங்கிச் செயல்படுத்தும் நோக்கில், நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக ரூ. 812 கோடி நிதியைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் திருமணச் செலவைக் குறைக்கும் மிகப்பெரிய வாழ்வாதார உதவியாக இத்திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் 'அண்ணன் சீர்' (Annan Seer) திட்டத்தின் கீழ் 1 பவுன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை யாருக்கெல்லாம் கிடைக்கும்.

தகுதியானவர்கள்: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

திருமண தேதி: அரசு ஆணை வெளியிடப்பட்ட தேதியான அக்டோபர் 5, 2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ திருமணம் செய்துகொள்ளும் அல்லது திருமணம் நடைபெறும் பெண்களுக்கு இந்த உதவி வழங்கப்படும்.

உதவி விவரங்கள்: ஒவ்வொரு தகுதியான மணப்பெண்ணுக்கும் 8 கிராம் (1 பவுன்) 22 காரட் தங்க நாணயமும், ஒரு தரமான பட்டுப்புடவையும் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? ரூ.5 கோடி கடன் தரும் வெற்றி மகளிர் திட்டம்..!
அண்ணன் சீர் திட்டம்
logo
Kalki Online
kalkionline.com