நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை அறிவிப்பு..!

Folk Artist Incentives
Folk Artist
Published on

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறை நேற்று நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அப்போது நாட்டுப்புறக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பயிற்சியில் பங்கேற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவின் ஆதிக்கம் மேலோங்கிய பிறகு தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது கூடுதலாக ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டின் பழம் பெரும் கலைகளை மீட்டெடுப்பது அரசின் தலையாய கடமை. இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டுப்புறக் கலை, நாடகக் கலை, இலக்கியக் கலை மற்றும் காட்சிக் கலை உள்ளிட்ட 4 கலைகளில் கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கலையிலும் சிறந்து விளங்கும் 10 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன்படி மொத்தம் 40 பேருக்கு தலா ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.10,000 என பிரித்து வழங்கப்படும். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசின் இந்த ஊக்கத்தொகை புத்துணர்ச்சியை அளிக்கும்” என அவர் கூறினார்.

நாட்டுப்புறக் கலைஞர்கள் முதலில் ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில்’ தங்களை உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். அவ்வப்போது தங்களது உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அப்போது தான் அரசு நலத்திட்டங்களில் பயன்பெற முடியும்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்க வழங்கப்படும் இதர உதவித்தொகைகள்:

1. நாட்டுப்புறக் கலைஞர்களின் மகன் அல்லது மகள் திருமணத்திற்கு நலவாரியம் சார்பில் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அதிகபட்சமாக 2 முறை மட்டுமே கிடைக்கும்.

2. நாட்டுப்புறக் கலைஞர்கள் மூக்குக் கண்ணாடி வாங்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.1,500 வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
குவியும் பாராட்டுக்கள்..!கலைமாமணி விருது பெறும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்..!
Folk Artist Incentives

3. நாட்டுப்புறக் கலைஞர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால் இறுதிச் சடங்கை நடத்த நலவாரியம் சார்பில் ரூ.5,000 மற்றும் குடும்ப உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும். ஒருவேளை நாட்டுப்புறக் கலைஞர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1,00,000 உதவித்தொகை வழங்கப்படும்.

4. நாட்டுப்புறக் கலைஞர்களின் மகன் அல்லது மகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதன்படி அதிகபட்சமாக 2 மகன் அல்லது மகளுக்கு 10ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.

5. நாட்டுப்புறக் கலைஞர்களின் மகப்பேறு காலங்களில் அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும். அதோடு கருச்சிதைவு ஏற்பட்டால் அதிகபட்சம் 2 முறை மருத்துவச் செலவுக்காக ரூ.3,000 வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
'அனமார்பிக் ஓவியங்கள்' அப்படின்னா என்னன்னு தெரியுமா?
Folk Artist Incentives

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com