

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் இன்று காலையில் பேருந்து ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், மீட்புப் படையினரும் காயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 5:30 மணியளவில் துளசிபகாலு என்ற கிராமத்திற்கு அருகே நடந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 19-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திராவில் மீண்டும் ஒரு பேருந்து விபத்து ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லூரி சீதாராம ராஜூ மாவட்ட ஆட்சியரின் தெரிவித்த தகவலின் படி, பேருந்தில் 35 பயணிகள், 2 ஓட்டுநர்கள் மற்றும் 1 துப்புரவாளர் உளபட மொத்தம் 38 இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மேலும கூறுகையில், "துளசிபகாலு கிராமத்திற்கே அருகே அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 12 பேருக்கு சம்பவ இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் CHC சிந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. முதலுதவி சிகிச்சை முடிந்த பிறகு காயமடைந்தவர்களை பத்ராச்சலத்திற்கு மாற்றுவோம்" என்று அவர் கூறினார்.
காட்டுப் பகுதிகளில் உள்ள தொடர்ச்சியான மலைகளில் கூர்மையான வளைவில் பேருந்து செல்லும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையை விட்டு விலகிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் பேருந்து செங்குத்தான சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே உள்ளூர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் வந்து விட்டனர். பேருந்து பயணிகளுக்கு உதவவும், இடிபாடுகளை அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த விபத்து சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் காயமடைந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதோடு பேருந்து விபத்து நடந்த இடத்திற்கு உடனே சென்று மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மூத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அனைத்து துறைகளும் ஒன்றாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.