
தமிழ்நாட்டில் மூத்த குடிமக்கள் ஆன்மீகத் தலங்களில் தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை இலவசத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கும் மூத்த குடிமக்கள் இலவசமாக செல்ல முடியும். இதுதவிர தமிழ்க் கடவுள் முருகன் அருள்பாலிக்கும் ஆறுபடை வீடுகளையும் ஒரேபயணத்தில் தரிசிக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.
இதன்படி நடப்பாண்டுக்கான ஆன்மீகப் பயணத்தில் அறுபடை வீட்டிற்கு இலவசமாக செல்ல மூத்த குடிமக்கள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச அறுபடை வீடு பயணம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “2025-26 ஆம் நிதியாண்டில் மூத்த குடிமக்களுக்கான ஆன்மீகப் பயணத்தை நிறைவேற்றும் வகையில், தற்போது முருகனின் அறுபடை வீட்டிற்கு இலவசமாக செல்லலாம். இதற்கு தகுதியான மூத்த குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீட்டிற்குச் செல்ல 60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்மீகப் பயணத்தில் 2,000 மூத்த குடிமக்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். ஆர்வமுள்ள மூத்த குடிமக்கள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தகுதிகள்:
மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு வட்டாட்சியரிடம் வருமானச் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
போதுமான உடல் தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய மருத்துவச் சான்றிதழ் அவசியம். இதனுடன் ஆதார் நகலையும் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்திற்கு செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள், அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பப் படிவத்தை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடைசி தேதி:
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற 15-09-2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்மீகப் பயணம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 1757 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.