
தமிழ்நாட்டில் +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் நடப்பாண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு அடுத்த ஆண்டு வரைக் காத்திருக்கத் தேவையில்லை எனவும், இந்த ஆண்டே கல்லூரிகளில் சேர முடியும் எனவும் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
2025-26 கல்வி ஆண்டுக்கான கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மே மாதம் 7 இல் தொடங்கியது. தற்போது கலந்தாய்வு முடிந்து முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் தற்போது தான் +2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நடப்பாண்டே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் கல்லூரிகள் இல்லாத பகுதிகளில் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் கட்ட தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் ஆணைப்படி 15 கல்லூரிகள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டு விட்டன. மேலும் கூடுதலாக 15,000 கல்லூரி சேர்க்கைக்கான இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்லூரி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் உடனடியாக கல்லூரி படிப்பைத் தொடரும் வகையில் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே கல்லூரியில் சேரும் வகையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரி படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
+2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுள்ளது. துணைத் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றோம் என எந்த மாணவரும் தன்னைத் தானே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். பள்ளிப் படிப்பின் காலம் முடிந்து விரைந்து கல்லூரி பிடிப்பில் இணையுங்கள் என கல்வி வல்லுநர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.