
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பிரச்சினையின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73.
இசையை ரசிக்காதவர்கள் இல்லை; இளம் வயதினர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் இசையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் உசேனின் தபேலா இசையை கேட்க காத்திருந்த ரசிகர்கள் ஏராளம். அவர் ஸ்டைலாக தபேலா வாசிப்பதை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் காத்து கிடக்கும்.
5-வது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கிய ஜாகிர் உசேன் தனது 11 வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இவரது இசை ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு 150-க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை படைத்தார். இவரது நிகழ்ச்சியை புக் செய்ய பலர் மாதக்கணக்கில் காத்து கிடந்தனர்.
‘Living in the material world ’ என்ற இவரது முதல் இசை ஆல்பம் 1973-ல் வெளிவந்தது. இதை தொடர்ந்து பல ஆல்பங்களை வெளியிட்டார்.
ஜாகிர் உசேன் நான்கு கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்கு கிடைத்தது.
ஜாகிர் உசேன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "ஜாகிர் பாய் ஒரு இன்ஸ்பிரேஷன். தபேலா இசையை உலகளாவிய புகழுக்கு உயர்த்திய ஓர் ஆளுமை. அவரது இழப்பு நம் அனைவராலும் அளவிட முடியாதது. சமீப காலங்களில் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அவரது குடும்பத்தினரும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற மாணவர்களும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைப் பெற பிராத்திக்கிறேன். இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம்!" என்று பதிவிட்டிருக்கிறார்.
கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், "ஜாகிர் பாய், அவர் சீக்கிரமே சென்றுவிட்டார். எனினும்,அவர் தனது கலையின் மூலம் விட்டுச் சென்றவை மற்றும் அவர் நமக்கு கொடுத்த பொன்னான காலத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி," குறிப்பிட்டுள்ளார்.
இந்தி நடிகர் அக்ஷய் குமார் 'உஸ்தாத் ஜாகிர் உசேன் சாப் மறைவு அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் உண்மையிலேயே நம் நாட்டின் இசை பாரம்பரியத்திற்கு ஒரு பொக்கிஷம். ஓம் சாந்தி' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் ஹுசைனின் "மிகப்பெரிய பணிவு, அணுகக்கூடிய இயல்பு" ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்.
நடிகை நித்யா மேனன் இன்ஸ்டா பதிவில் "இந்த அசாதாரண கலைஞரை நான் நேரில் பார்க்கும் நாள் இனி வராது. என்ன ஒரு சிறப்பு ஆன்மா! தெய்வீகத்துடன் கலப்படமற்ற தொடர்பு. உண்மையான கலைஞர். அவரது இசையில் இருந்த விளையாட்டுத்தனம் மற்றும் லேசான தன்மை, மறுக்க முடியாத தீவிரம் என்னை சுவாசிக்க மறக்கச் செய்தது....... அமைதியாக இருங்கள் Maestro. நீங்கள் இருக்கும் இடத்தில் நிச்சயமாக மிக உயர்ந்து செல்கிறீர்கள்" என்று கூறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மறைந்த ஜாகிர் உசேனின் கடைசி பதிவை மக்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கடந்த அக்டோபரில், இலையுதிர் காலத்தை தான் அமெரிக்காவில் கழிப்பதாக ஜாகிர் தெரிவித்தார். அவர் தனது சமூக ஊடகத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், அமெரிக்காவில் மாறிவரும் வானிலையின் ஒரு பார்வையை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து, "ஒரு அதிசய தருணத்தைப் பகிர்கிறேன் 🙏🙏❤️" என்று அவர் பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.
அவரது மரணச் செய்தியைத் தொடர்ந்து, பல சமூக ஊடக பயனர்கள் அவரது கருத்துப் பகுதிக்கு சென்று அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.