
அவசரத் தேவைக்கு பலரும் நகைக்கடனையே நம்பியுள்ளனர். குறைந்த வட்டியில் உடனடி பணம் கிடைக்க தங்க நகைக் கடன் தான் இன்று வரையில் சிறந்த கடனாக உள்ளது. இருப்பினும் ஒரு பவுன் தங்க நகைக்கு சந்தை விலையைக் காட்டிலும் சற்று குறைவாகவே கடன் கிடைக்கும். வங்கிக்கு வங்கி நகைக் கடனில் சில வேறுபாடுகள் இருக்கும். அடகு வைக்கப்படும் தங்க நகையில் கிட்டத்தட்ட 70% முதல் 80% வரையில் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இந்நிலையில் தற்போது 90% வரை கடன் கொடுக்க முன்வந்திருக்கிறது சௌத் இந்தியன் வங்கி. (SIB).
வாடிக்கையாளர்களுக்கு நிறைவான தங்க நகைக் கடனை வழங்க சௌத் இந்தியன் வங்கி திட்டமிட்டது. இதற்காக கோல்ட் எக்ஸ்பிரஸ் (Gold Express) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எந்த நேரத்திலும் தங்க நகைக் கடன் வழங்க சௌத் இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.
கோல்டன் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் மூலம் 3 ஆண்டு கால அவகாசத்தில் ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம். அதோடு கடனை எந்நேரத்தில் வேண்டுமானாலும் திருப்பி செலுத்தும் வசதியும் உண்டு. சிறு தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் கோல்டன் எக்ஸ்பிரஸ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது சௌத் இந்தியன் வங்கி. இதன்படி சிறு வணிகர்கள், சிறு குறு வணிக நிறுவனங்கள், காய்கறி வணிகர்கள் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்ய முயல்பவர்கள் உள்பட அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.
தங்க நகைக் கடனை வெளிப்படையானதாக மாற்றவும், வாடிக்கையாளர்களின் பணத்தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்தக் கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என சௌத் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. கோல்டன் எக்ஸ்பிரஸ் கடன் முற்றிலுமாக டிஜிட்டல் வடிவத்திலேயே மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள அனைத்து சௌத் இந்தியன் வங்கி கிளைகளிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தங்க நகைகளுக்கான கடன் மதிப்பீட்டு அளவை 75 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதமாக உயர்த்தக் கோரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. இதன்படி ரூ.2.5 இலட்சத்திற்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கு 85% கடன் தொகை கிடைக்கும்.
இந்நிலையில் மற்ற வங்கிகளைக் காட்டிலும் 5% கூடுதலாக கடன் வழங்குகிறது சௌத் இந்தியன் வங்கி. தங்க நகைக் கடனுக்கு இனி அதிக கடன் தொகையைப் பெற முடியும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.