

கிராமங்களைக் காட்டிலும் இன்றைய காலகட்டத்தில் நகரங்களில் தான் செல்லப் பிராணிகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அதிக அளவில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளின் பட்டியலில் நாய் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக வெறி நாய் கடித்ததில் சிலர் இறந்ததாக வெளிவந்த செய்திகள், நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிமம் பெறாமல் செல்லப் பிராணிகளை வளர்க்கும் பொதுமக்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்ற குழு கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் துணை மேயர், ஆணையர், மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சியின் தடையின்மை சான்று வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதை நெறிமுறைப்படுத்தும் வகையில் உரிமம் பெற வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செல்லப்பிராணிகளை வளர்ப்போர், செல்லப் பிராணியின் விவரங்களை செயலியில் பதிவு செய்து, புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது ரூ50-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். செல்லப் பிராணிக்கு ரேபிஸ் தடுப்பூசி பரிசோதனைகளுக்குப் பிறகு அரசின் உரிமம் வழங்கப்படும்.
உரிமம் வழங்கப்படும் போது, செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படும். இன்று முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை செல்லப்பிராணிகளின் விவரங்களைப் பதிவு செய்து உரிமம் பெறலாம். உரிமம் பெறவில்லை என்றால் நவம்பர் 24 ஆம் தேதிக்கு பிறகு, ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
செல்லப் பிராணிகளுக்கு சிப் பொருத்துவது முதல் அதன் விவரங்களை பதிவேற்றம் செய்து, அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருப்பதால், சென்னை மக்கள் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் எத்தனை செல்லப் பிராணிகள் முறையாக வளர்க்கப்படுகின்றன என்ற தகவல் அரசுக்கு தெரியவரும்.
