
தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவ்வகையில் மாநில திறனறித் தேர்வு மூலம் +1 படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500-ஐ வழங்கி வருகிறது. நடப்பாண்டு திறனறித் தேர்வுக்கான அறிவிப்பு இன்று காலையில் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ் மொழித் திறனறித் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,5000 வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி அறிவில் சிறந்து விளங்க ஆண்டுதோறும் ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான திறனறித் தேர்வு வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்றால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் என்பதால் மாணவர்கள் மத்தியில் இந்தத் தேர்வுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருந்து வினாக்கள் கொள்குறி வகையில் கேட்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரில் தமிழ் மொழி திறனறித் தேர்வு நடத்தபடும்.
இத்தேர்வில் மூலம் தமிழ்நாடு முழுக்க மொத்தம் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் அரசுப் பள்ளிகளில் இருந்து 50% மாணவர்களும், தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இருந்து 50% மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் +1 பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
மாணவர்கள் www.dge.tn.gov.h என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி தலைமையாசிரியரிடம் மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் இந்த அரிய வாய்ப்பை +1 மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த அறிவிப்பு குறித்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் தேதி: 22-08-2025 முதல் 04-09-2025
தேர்வு நடக்கும் தேதி: 11-10-2025 (சனிக்கிழமை).