
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் கொடுக்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்த ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயலில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை நடப்பாண்டின் இறுதிக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக 10 இலட்சம் இலவச லேப்டாப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏசர், டெல் மற்றும் எச்பி ஆகிய 3 சர்வதேச நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு லேப்டாப் தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும்.
ஒரு லேப்டாப்பின் குறைந்தபட்ச விலை ரூ.23,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட லேப்டாப்புகளை விடவும் இம்முறை வழங்கப்போகும் லேப்டாப் அதிக வசதிகளையும், அம்சங்களையும் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறனுக்கு லேப்டாப் உதவிகரமாக இருக்கும்.
3 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தை டெண்டர் மூலம் தமிழ்நாடு அரசு தேர்வு செய்ததும், லேப்டாப் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். இதன்படி வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் 10 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநரான கே.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக 10 இலட்சம் லேப்டாப்புகள் வழங்கப்பட்ட பிறகு, இரண்டாவது கட்டமாக மீண்டும் 10 இலட்சம் லேப்டாப்புகள் வழங்கப்படவுள்ளன.
லேப்டாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதற்காக மாவட்டந்தோறும் ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனத்தின் பாரமரிப்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையத்திற்கு மாணவர்கள் நேரடியாக சென்று குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.
மேலும் லேப்டாப் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் புகார் கொடுப்பதோடு, புகாரின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். மேலும் லேப்டாப்பின் எந்தப் பாகத்தில் குறைபாடு உள்ளது என்பதை ஆன்லைனில் தெரிவித்தால், அப்பாகம் எப்போது கிடைக்கும் என்ற தகவலையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும். அக்டோபரில் இலவச லேப்டாப்புகள் வழங்கப்பட உள்ளதால், மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது அமைந்துள்ளது.