
இந்திய அளவில் தற்போது ஆன்லைன் வழியாக பல்வேறு படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் ஊரடங்கின் போது ஆன்லைன் கல்வி மிகவும் பிரபலமடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் கூட ஆன்லைன் கல்விக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. இருப்பினும் மருத்துவப் படிப்புகளை இனி ஆன்லைனில் வழங்கக்கூடாது என இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஆன்லைன், தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தநிலைக் கல்வி வழியாக மருத்துவப் படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கக் கூடாது என மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தொலைதூரக் கல்விப் பணியகத்தின் 24வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆன்லைன் மருத்துவக் கல்வியை நிறுத்துவது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டன. தற்போது இந்த கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவை யுஜிசி அறிவித்துள்ளது இதன்படி மைக்ரோபயாலஜி, உளவியல், பயோடெக்னாலஜி, உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல், கினிக்கல் ஊட்டச்சத்து மற்றும் டயாமிட்டிஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை இனி ஆன்லைனில் படிக்க முடியாது. இந்த அறிவிப்பு 2025-26 கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன், திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்வி வழியாக மருத்துவப் படிப்புகளை வழங்க மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மருத்துவக் கல்வி இனி ஆன்லைனில் கிடைக்காது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இனி ஆன்லைன் மருத்துவக் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது என மருத்துவக் கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தவிர்த்து இதர பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் முதன்மைப் படிப்புகளை வழக்கம் போல் ஆன்லைனில் வழங்க எவ்வித தடையும் இல்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குறிப்பிட்ட சில நாடுகளில் பயிலும் மருத்துவப் படிப்புகள் இந்தியாவில் செல்லாது என யுஜிசி அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஆன்லைன் மருத்துவக் கல்விக்கும் தடை விதித்துள்ளது.
மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியைத் தரமாக வழங்க வேண்டும் என யுஜிசி பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகையால் மருத்துவப் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, மாணவர்கள் அப்படிப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.