
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் சென்னையில் தங்கி வேலை செய்கின்றனர். பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறைகள் வரும் போது இவர்கள் சொந்த ஊருக்குச் சென்று வருவது வழக்கம். குறிப்பாக பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கியமான பண்டிகைகளுக்கு அனைவருமே சொந்த ஊருக்குச் செல்வார்கள். இந்நேரத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கவும் சிறப்பு இரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக இரயில்களில் பயணிப்போர் முன்னதாகவே முன்பதிவு செய்திருத்தல் அவசியம்.
இரயில்வே துறையின் தற்போதைய நடைமுறைப்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர்ச் செல்லவிருக்கும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு தேதியை அறிவித்துள்ளது தெற்கு இரயில்வே துறை.
இரயில் பயணிகளின் வசதிக்காக தீபாவளிக்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கவிருக்கிறது. தீபாவளி திங்கட்கிழமை வருவதால், அதற்கு முன்பாகவே பயணிகள் ஊருக்குச் செல்ல திட்டமிடுவார்கள். ஏனெனில் தீபாவளிக்கு முன்பு சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் பலரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை இரவே இரயில் பயணத்திற்கு ஆயத்தமாவார்கள். பயணிகளின் வசதிக்காக இன்று முதல் (ஆகஸ்ட் 16) தீபாவளி இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
இதன்படி அக்டோபர் 17 ஆம் தேதி இரயிலில் பயணிக்கு ஆகஸ்ட் 16 (இன்று) டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.அதேபோல் அக்டோபர் 18 இரயில் பயணத்திற்கு ஆகஸ்ட் 17 (நாளை) டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களில் பண்டிகைகள் இருப்பதால், பயணிகள் ஊருக்குச் செல்வதற்கு மட்டுமின்றி திரும்பி வருவதற்கும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால் பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அக்டோபர் 13 முதல் 26 வரை சொந்த ஊருக்குச் செல்வதற்கான இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து, நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை ரிட்டர்ன் டிக்கெட்டை முன்பதிவு செய்தால் 20% தள்ளுபடி கிடைக்கும். இந்த சிறப்பு முன்பதிவில் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தேதிகளிலும் இரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். சொந்த ஊருக்குச் செல்லவிருக்கும் பயணிகள் இரயில்வே வெளியிட்டுள்ள கால அட்டவணையின் படி டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க இரயில்வே குறிப்பிட்டுள்ள தேதியில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுவது நல்லது.
வெளி மாநிலங்களான வட இந்தியாவுக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. இதில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாற்றங்கள் இருக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.