அருண் ஐபிஎஸ் மீண்டும் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி..!!

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி அருணை, மீண்டும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Arun IPS
Arun IPSimage credit-newindianexpress.com
Updated on

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஏ.அருண் அப்பதவியிலிருந்து திடீரென மாற்றப்பட்டு, ஊனமாச்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சிப் பள்ளியின் (Tamil Nadu Police Academy) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தவெக ஆட்சியில் ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார். அவர் பதவியேற்று கிட்டதட்ட 45 நாட்கள் ஆனநிலையில் தற்போது மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த திடீர் நிர்வாக மாற்றம் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவருக்கு பதில், புதிய ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக இருக்கும் மகேஸ்வரி, இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ்-ஐ நடந்து முடிந்த தேர்தல் சமயத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதுடன் அந்தப் பதவிக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தவெக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததை தொடர்ந்து, ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தான் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண் ஐபிஎஸ், கடந்த மே 25-ந்தேதி தான் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பை ஏற்று வெறும் 45 நாள்களே ஆகியிருக்கும் நிலையில், மறுபடியும் அவர் அப்பதவியிலிருந்து திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய அருண் ஐபிஎஸ்-ஸின் இந்த திடீர் பணியிட மாற்றம் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil nadu government
tamil nadu governmentimage credit-linkedin.com

இதற்கு முன்னதாக, அவர் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்தபோது சர்ச்சைக்குரிய வழக்குகள், குண்டாஸ் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் கைது நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகள் விவாதப் பொருளாகின. பத்திரிகையாளரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் கைது விவகாரம் மற்றும் சில வழக்குகளில் இவரது நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களைச் சந்தித்தன.

குறிப்பாக சிவில் வழக்கில், தொழிலதிபர் மீது குண்டாஸ் பயன்படுத்தியதால் நீதிமன்றத்தின் கோபத்திற்கு ஆளானார். இதற்கு முன்பு, பத்திரிகையாளர்கள் சவுக்கு சங்கர் மற்றும் வராகி மீது குண்டாஸ் போடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்! - 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
Arun IPS

அப்போதே நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு, வராகி மீது போடப்பட்ட குண்டாஸை ரத்து செய்து, ரூ.50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அதன் பின்னரும் தொழில் அதிபர் மீது குண்டாஸ் போடப்பட்டதால் நீதிமன்றத்தை அதிருப்தி அடைந்து அருணை கடுமையாக கண்டித்திருந்தது. மேலும் சிவில் வழக்கில் யாராவது குண்டாஸை பயன்படுத்துவார்களா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. மட்டுமின்றி இந்த வழக்கில் அருண் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய நிலையில், அந்த சம்மனை கொண்டு வந்த நீதிமன்ற அதிகாரிகளை 2 மணி நேரம் அருண் ஐபிஎஸ் காக்க வைத்த நிலையில் அதற்கு நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பி நியமனம்!
Arun IPS

இப்படியாக அருண் ஐபிஎஸ் மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com