'’ஏலே! ஏலக்காய் வாங்கலியோ ஏலக்காய்!’’ ஏல வணிகத்தில் அசத்தும் பெண்கள்!

ஏலக்காய்...
ஏலக்காய்...Image credit - bplive.com

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மாலி, அன்னியார் தொழு, கருவாக்குளம், வண்டன்மேடு, பாதத்தோடு, ராஜகுமாரி, போடிமெட்டு, சாந்தம்பாறை மற்றும் மூணாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 70 ஆயிரம் தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த விவசாயிகளால் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. உலகிலேயே கவுதமாலா நாட்டிற்கு அடுத்து, ஏலக்காய் உற்பத்தி இங்குதான் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் ஏலக்காய் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப் படுவதுடன், வளைகுடா மற்றும் ஆசியக் கண்டத்திலுள்ள பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்களை விவசாயிகளிடமிருந்து பெற்று விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்திட வசதியாக, இந்திய அரசின் ’இந்திய வாசனைப் பொருட்கள் வாரியம்’ (Spices Board India), ஏலக்காய் உரிமம் மற்றும் சந்தைப்படுத்தல் விதிகள் 1987 (வாசனைப் பொருட்கள் வாரியச் சட்டம் 1986ன் படி வடிவமைக்கப்பட்டது) எனும் விதிகளின் கீழ், ஏலக்காய் வணிக நடவடிக்கை வசதிக்காக, 2007 ஆம் ஆண்டு கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி எனுமிடத்திலும், தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் எனும் இடத்திலும் மின்வழி ஏல மையங்களை (e-Auction centers) நிறுவியிருக்கிறது.

இந்த ஏல மையங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த ஏலக்காய்களை, வாரியத்தால் அனுமதி பெற்ற ஏல நிறுவனங்களின் வழியாக ஏலம் விட அனுமதிக்கப் படுகிறது. வாரியத்தின் அனுமதி பெற்ற விற்பனையாளர் கள் இந்த மின் வழி ஏல முறையில் கலந்து கொண்டு ஏலக்காய்களைக் கொள்முதல் செய்கின்றனர். 

இந்த ஏல மையங்களில் ஞாயிறு தவிர, மற்ற வார நாட்கள் அனைத்திலும் காலை, மாலை என்று இரு வேளைகளில் ஏல (Auction) முறையில் ஏலக்காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகளிடமிருந்து ஏலக்காய் களைப் பெற்று ஏல முறையில் விற்பனை செய்திட இதுவரை 16 நிறுவனங்கள் இந்திய வாசனைப் பொருட்கள் வாரியத்தின் அனுமதியைப் பெற்றிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வெற்றியைத் தடுக்கும் பயத்தை உதறித் தள்ளுங்கள்!
ஏலக்காய்...

தற்போது, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 49 பெண்கள் இணைந்து, ‘இடுக்கி மகளிர் ஏலக்காய் உற்பத்தி நிறுவனம்’ எனும் பெயரில் ஏல (Auction) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, இந்திய வாசனைப் பொருட்கள் வாரியத்தின் அனுமதியைப் பெற்று செயல்படத் தொடங்கியிருக்கிறது. ஏல வணிகத்தில் முதன் முறையாக, மகளிர் நடத்தும் இடுக்கி மகளிர் ஏலக்காய் உற்பத்தி நிறுவனம், கடந்த 18-5-2024 அன்று புத்தடி மற்றும் போடிநாயக்கனூர் மையங்களில் ஏலக்காய் ஏலத்தில் பங்கேற்று தனது முதல் விற்பனையைத் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com