

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 5 மாநிலத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். தமிழகத்துக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct - MCC) உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அத்துடன் மாநில அரசு முழுமையாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இந்த விதிமுறைகள் தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும். இந்நிலையில் இந்த தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன? இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க...
தேர்தலை சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பே தேர்தல் நடத்தை விதிகள் ஆகும். சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய 1960-ம் ஆண்டு கேரளா சட்டமன்றத் தேர்தலில் இது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க தீவிர வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் பொதுமக்கள் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அப்படி எடுத்துச் சென்றால் அதற்கான முறையான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லாதபட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும். ரூ.50 ஆயிரம் வரை ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச்செல்லலாம்.
* வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பட்டுப்புடவை, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பரிசு பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் இதர பரிசு பொருட்களை எடுத்து செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதலாக வாய்ப்புள்ளது.
* தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அரசின் சார்பில் எந்த விதமான புதிய மக்கள் நலத்திட்டங்களையும், சலுகைகளையும், புதிய மானியங்களையும் அறிவிக்க முடியாது. அதாவது, முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டு விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என அனைத்திற்குமே ‘நோ’ தான்.
* அமைச்சர்கள் தங்களின் பிரச்சாரங்களுக்காக அரசின் வாகனங்கள், அரசு விமானம், ஹெலிகாப்டர்கள் அல்லது அரசு அதிகாரிகளை பயன்படுத்த முடியாது.
* எந்த ஒரு அரசுத் துறையிலும் புதிய பணி நியமனங்களையோ அல்லது அதிகாரிகளின் இடமாற்றங்களையும் செய்ய முடியாது. ஆனால் அவசர தேவைகள் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெற்று செய்து கொள்ளலாம்.
* அரசு அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக்கூடாது. அதேபோல் அரசு திட்டங்கள் தொடர்பாக கல்வெட்டுகளில் இடம்பெற்று உள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களும் மறைக்கப்படும்.
* அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.
* பொதுமக்கள் பெரியளவில் கூட்டங்களை கூட்டுவதற்கும், போராட்டங்களை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.
* பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்த விரும்பும் கட்சிகள், முன்கூட்டியே காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பிற கட்சிகளின் கொடிகள் அல்லது விளம்பரங்களை அகற்றவோ, சேதப்படுத்தவோ கூடாது.
* பிரசாத்தில் மற்ற கட்சிகளை விமர்சிக்கும்போது தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, கொள்கை ரீதியான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.
* அரசியல் கட்சிகள் மதம், சாதி அல்லது மொழி ரீதியான உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கக் கூடாது.
* தனிப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு முன்னால் போராட்டம் நடத்தவோ, அனுமதியின்றி சுவர்களில் விளம்பரம் செய்யவோ கூடாது.
* ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் குறிப்பிட்ட நேர வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
* மதத் தலங்களான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது மிக முக்கியமான விதியாகும்.
* வாக்குப்பதிவு நடைபெறும் (ஏப்ரல் மாதம் 23ம் தேதி) நாளைக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் பிரச்சாரங்களையும் முடித்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி பிரச்சாரம் செய்தால் அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கூட தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது.
* வாக்காளர்களை பாதிக்கும் வகையில் பணம், பரிசுகள் அல்லது மதுபானம் வழங்குவது சட்டவிரோதமாகும். உங்கள் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலோ அல்லது விதிமீறல்கள் நடந்தாலோ 'cVIGIL' ஆப் மூலம் நேரடியாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
* அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினருடன் துணை ராணுவப் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் தேர்தல் முறையாக, எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.