

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மின்னணு ரசீதுகள் மூலம் அபராத தொகை விதிக்கப்பட்டது. பிறகு மின்னணு ரசீது வழங்கும் முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது ‘ஒரே நாடு ஒரே சலான்’ என்ற திட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இ-சலானை ஆன்லைனில் செலுத்துவது எப்படி என்பதை வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சில ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் பலரும் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுவரை அபராத தொகையை செலுத்தாத வாகன ஓட்டிகள், விரைந்து செலுத்துமாறு இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியது. இல்லையெனில் வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய அபராத தொகை மட்டும் ரூ.14,000 கோடியை தாண்டுகிறது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-சலான் முறையில் அபராத தொகையை செலுத்தும் வழிமுறைகள்:
1. முதலில் echallan.parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. சலான் எண் அல்லது வாகன எண் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒனறைக் கொண்டு அபராத தொகை உள்ளிட்ட தகவலைத் தேடலாம்.
3. குறிப்பாக சலான் எண் கொடுப்பது நல்லது.
4. சலான் எண்ணை உள்ளிட்டு, திரையில் தெரியும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
5. பிறகு உங்களின் இ-சலான் விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டு, அபராத தொகையை செலுத்தவும் (Pay Fine Amount) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
6. இப்போது உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி-யை சரிபார்க்க வேண்டும்.
7. நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுகிறேன் என்பதை கிளிக் செய்து விட்டு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
8. இப்போது யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து அபராத தொகையை செலுத்தலாம்.
9. அபராத தொகையை செலுத்தி முடித்த பின்னர், அதற்கான ரசீதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தற்போது ஏஐ கேமராக்கள் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேரடியாக போக்குவரத்து ஆய்வாளர்கள் இ-சலான் வழங்குவது மட்டுமின்றி, கேமராக்கள் மூலமும் வாகனை எண்ணைக் கொண்டு ஆன்லைனில் இ-சலான் உருவாக்கப்படுகிறது.
ஒருவேளை போக்குவரத்து விதிமுறைகளை நீங்கள் மீறி இருந்தால், உடனே அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்கள் வாகன எண்ணைப் பதிவிட்டு, அபராத தொகைக்கான இ-சலான் ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5 முறை இ-சலான் பெற்றால் ஆபத்து:
ஒரு வருடத்தில் 5 அல்லது அதற்கும் மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, இ-சலானைப் பெற்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வாகன ஓட்டிகளை அழைத்து விசாரணை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்படும். போக்குவரத்து விதிமீறலுக்கு ஏற்ப 3 அல்லது 6 மாதங்கள் அல்லது 1 வருடம் என உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.