
பண்டிகை காலம் வந்துவிட்டாலே ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை அறிவிப்பார்கள். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் நிச்சயமாக சலுகைகள் கிடைக்கும் என காத்துக் கொண்டிருப்பார்கள். இருப்பினும் ஆன்லைன் தளங்கள் வெளியிடும் சலுகைகளை நன்கு ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் நோ காஸ்ட் EMI வசதி ஆன்லைனில் பிரபலமாக உள்ளது.
பண்டிகை காலங்களில் நோ காஸ்ட் EMI வசதியை பெருமாபாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதுண்டு. இருப்பினும் இதில் நமக்கு பலன் கிடைக்கிறதா என்பதை பலரும் உணரவில்லை. அதிக விலைக்கு விற்கப்படும் மொபைல்போன், டிவி, ஃபிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல பொருட்களை ஆன்லைனில் மாதத் தவணை அடிப்படையில் வாங்கலாம். இதில் பொருளின் அடிப்படை விலையுடன் வட்டியையும் நாம் சேர்த்து கட்ட வேண்டும்.
இந்நிலையில் நோ காஸ்ட் EMI வசதி வந்ததும், வட்டித் தொல்லை இனி இல்லை என வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் உண்மையில் வட்டி இல்லையா அல்லது மறைமுகமாக வட்டி வசூலிக்கப்படுகிறதா என்பதை யாரும் உணரவில்லை.
உதாரணத்திற்கு ஒருவர் நோ காஸ்ட் EMI வசதியில் ஒரு டிவியை ரூ.40,000-க்கு வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால் உண்மையில் அந்த டிவியின் விலை இதுதானா என்பதை நாம் ஆராய வேண்டியது அவசியம். ஏனெனில் எந்தவொரு வங்கியும் வட்டியின்றி மாதத் தவணை வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை.
பண்டிகை காலங்களில் அந்த டிவியின் பிராண்ட் நிறுவனம் வட்டிக்கான மானியத் தொகையை வழங்கும். இந்தத் தொகையை வங்கிகள் வாங்கிக் கொள்ளும். இதனை மறைத்து தான் உங்களிடம் நோ காஸ்ட் EMI என விளம்பரப்படுத்துவார்கள். மேலும் பிராசஸிங் கட்டணம் என்ற பெயரில் கூட சில கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கலாம்.
அதே டிவியின் விலையை நீங்கள் மாதத் தவணை இல்லாமல் வாங்கினால், நிச்சயமாக ரூ.40,000-க்கு சற்று குறைவாகத் தான் இருக்கும். மேலும் ஒருசில குறிப்பிட்ட டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு 5% முதல் 10% வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என்பதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஆகவே ஒரு பொருளை மாதத் தவணையில் வாங்கினால் மொத்தம் எவ்வளவு விலை வரும் மற்றும் அப்போதே பணம் கொடுத்து வாங்கினால் எவ்வளவு விலை என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே நாம் வட்டி கட்டுகிறோமோ இல்லையா என்பது தெரிந்து விடும்.
ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், நோ காஸ்ட் EMI குறித்த விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு அவசியம் தேவை. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் மற்றும் மீஸோ உள்ளிட்ட பல ஆன்லைன் தளங்கள் நோ காஸ்ட் EMI, ஆன்லைன் பரிவர்த்தனை சலுகைகள் உள்ளிட்ட சில சலுகைகளை அறிவிக்கும்.
இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஆன்லைனில் பொருட்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது. அதோடு ஒரு பொருளின் விலையை அனைத்து ஆன்லைன் தளங்களிலும் சரிபார்த்து எதில் குறைவாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்.