சமீபத்தில் சாலமன் தீவின் பிரதமர் ஜெரேமியா மானேலை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்து பேசினார். அப்போது சாலமன் தீவுகளை பாதுகாக்க 1000 கோடி வழங்குவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
சாலமன் தீவுகள் மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலபரப்பு 28,400 சதுர கிமீ ஆகும். இதன் தலைநகர் ஓனியாரா குவாடல்கனால் தீவில் இருக்கிறது. சாலமன் தீவுகளில் , தற்போதைய மக்கள்தொகை 2023 இல் 800,005 ஆக உள்ளது , 2050 இல் 64 % அதிகரித்து 1,309,110 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீவு ஆஸ்திரேலியாவுக்கு அருகில்தான் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு சாலமன் தீவுகளுக்கும் சீனாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சீனா தனது ராணுவ தளத்தை அங்கு அமைக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்தநிலையில்தான் சமீபத்தில் சாலமன் தீவு பிரதமர் ஜெரேமியா மானேலை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்தான் ஆஸ்திரேலியா ரூ 1000 கோடி தீவுகளின் பாதுகாப்புக்காக கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. டாலர் கணக்குப்படி சுமார் 118 மில்லியன் டாலர் (160.5 மில்லியன் வெள்ளி) நிதியுதவியும் பயிற்சியும் அளிக்கும்; உள்கட்டமைப்புக்கு ஆதரவு கொடுக்கும்.
சால்மன் தீவுகளில் கூடுதல் போலீஸாரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. பின்னர் அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், `இந்த நிதியுதவி மூலம் சாலமன் தீவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் இனிவரும் காலங்களில் நாட்டின் பாதுகாப்புக்காக வெளிப்புற கூட்டாளிகளை நம்பியிருப்பது குறையும்’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் போலீஸாருக்கு காவல் பயிற்சி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இதன்மூலம் பசிபிக் வட்டாரத்தில் ஆஸ்திரேலியாவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றன என்று அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் சாலமன் தீவுகளுக்கு நிலையான பாதுகாப்பு ஆற்றல்களை ஆஸ்திரேலியா வழங்கும் என்றும் அந்தத் தீவுகள் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதும் குறையும் என்றும் தெரிவித்தார்.