

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டு, 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
அப்படி மாலை அணிந்து சபரிமலை செல்லும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், குழுக்களாக சென்று சபரிமலையில் தரிசனம் முடிந்த பின்னர் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வது வழக்கம்.
அப்படி வரும் பக்தர்கள் வேன், பஸ் போன்றவற்றில் மொத்தமாக வருவது வழக்கம். அதன்படி, புனித ஸ்தலமான ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் ஏராளாமான ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி செல்கின்றனர்.
அவ்வாறு ராமேஸ்வரம் வரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி செல்லும் வழியில் பாம்பன் பாலத்தில் நின்றவாறு தாங்கள் அணிந்த பழைய கருப்பு வேஷ்டி மற்றும் துண்டுகளை கடலில் வீசுவது திடீர் வாடிக்கை ஆகியுள்ளது. இதனால் கடலில் ஆங்காங்கே துணிகள் மிதக்கின்றன. இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை.
ஐயப்ப பக்தர்களின் இத்தகைய அநாகரீகமான செயலால் நூற்றுக்கணக்கான கருப்பு துணிகள் கடலில் மிதப்பதுடன், கடலுக்கு அடியில் இருக்கும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மீன்பிடிக்கும் தொழிலை நம்பி இருக்கும் தங்களுடயை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கடலில் வீசி செல்லும் துணிகள் மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள விசிறியில் சிக்கி நாட்டுப்படகுகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாகவும், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள படகு கயிறுகளில் சுற்றி நங்கூரத்தை மேலே எடுக்க முடியாமல் கடும் சிரமப்படுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாவங்கள் நீங்கும் என்று நினைத்து பாம்பன் கடலில் பக்தர்கள் ஒருவர் செய்வதை பார்த்து மற்றொருவர் செய்வது தொடர்கதையாக மாறிவிட்டது. இவ்வாறு, கடலில் பக்தர்கள் பழைய துணிகளை வீசி செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கடல் சார் ஆர்வலர்களும், உள்ளூர் மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி ஐயப்ப பக்தர்கள் வேட்டி மற்றும் துண்டுகளை கடலில் வீசக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.