பாபா வாங்கா என்ற பல்கேரிய தீர்க்கதரிசியின் கூற்றுப்படி நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டது, இளவரசி டயானாவின் திடீர் மரணம் போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் 5 குறிப்பிடத்தக்க கணிப்புகள் தற்போது உலகளாவிய அளவில் கவனம் பெற்று வருகின்றன.
யார் இந்த பாபா வாங்கா?
பாபா வாங்கா, 1911 ல் பல்கேரியாவில் பிறந்த ஒரு ஆன்மீகவாதி மற்றும் ஞானி ஆவார். தன் 12 வது வயதில் பார்வையை இழந்த பாபா வாங்காவிற்கு எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கூறும் அசாதாரணமான திறன்கள் கிடைத்தது. எதிர்காலத்தைப் பற்றி அவர் கூறும் தீர்க்கதரிசனங்கள் மக்களால் வியந்து போற்றப்பட்டன. பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படுகிறார். அவர் ஏராளமான உலகளாவிய நிகழ்வுகளை முன்பே அறிவித்துள்ளார். 1996 இல் அவர் காலமானார்.
2025 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள்:
1. மோதலும் போரும்:
ஐரோப்பாவில் ஒரு குறிப்பிடத்தக்க போர் அல்லது மோதல் வெடிக்கும் என்று அவர் கூறியதாகத் தெரிகிறது. இது கண்டத்தின் மக்கள் தொகையை கடுமையாக பாதிக்கும். மேலும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான மோதலாகயும் இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
2. ஆசியாவில் இயற்கை பேரழிவுகள்:
ஆசியாவில் குறிப்பாக ஜப்பானில் பேரழிவு தரும் இயற்கை நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்று அவர் கணித்திருக்கிறார். நீருக்கடியில் பூகம்பம் அல்லது சுனாமி ஏற்படும் என்று கூறியிருக்கிறார். இந்தப் பேரிடர் கடலோர நகரங்களை பாதிக்கும். மேலும் உலகளாவிய கவலையை தூண்டும். ஜப்பான் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதாலும், இப்பகுதியை சுற்றி அதிகரித்து வரும் நில அதிர்வு செயல்பாடுகளாலும் குடிமக்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
3. உலகளாவிய பொருளாதார சரிவு;
ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடி உலகெங்கிலும் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இது முக்கிய பங்குச்சந்தைகளின் சரிவுடன் தொடங்குகிறது. இதனால் உலகளாவிய நிதி கொந்தளிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக வேலையின்மை, வறுமை மற்றும் முக்கிய நிறுவனங்களின் வீழ்ச்சி போன்றவை ஏற்படும். இந்த தீர்க்கதரிசனம் உலகம் முழுவதும் பணவீக்கம், பலவீனமான பொருளாதார அமைப்புகள், கடன் போன்ற அச்சங்களை எதிரொலித்து வருகிறது.
4. வேற்று கிரகத் தொடர்பு:
பாபா வாங்கா பூமிக்கு அப்பால் உள்ள அறிவார்ந்த உயிரினங்களை மனிதகுலம் விரைவில் கண்டுபிடித்து தொடர்பு கொள்ளும் என்று கூறியுள்ளார். மக்களுக்கு விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரகவாசிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் அவரது கணிப்புகளோடு ஒத்துப் போகின்றன. மேலும் இந்தப் பிரபஞ்சத்தில் வேற்றுக் கிரக வாசிகளின் இடம் குறித்த மனிதகுலத்தின் புரிதலை மாற்றக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
5. புதிய நோய்களின் எழுச்சி:
விசித்திரமான புதிய நோய்கள் பரவும் என்றும் தனது தீர்க்க தரிசனத்தில் கூறியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கோவிட்-19 போன்ற தொற்று நோய்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், உயிரியல் விபத்துகளால் ஏற்படும் எதிர்கால நோய்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அஞ்சுகிறார்கள். உலகளாவிய தயார் நிலை மற்றும் விழிப்புடன் கூடிய அறிவியல் ஆராய்ச்சியின் அவசியத்தை அவரது எச்சரிக்கை வலியுறுத்துகிறது.
6. மருத்துவத்துறை முன்னேற்றங்கள்:
இயற்கைப் பேரழிவுகள், போர் மற்றும் புதிய நோய்களின் பரவல் குறித்து அவர் எச்சரிக்கை தந்திருந்தாலும் மருத்துவத்துறை மிகுந்த முன்னேற்றம் காணும் என்றும் அவர் கூறியுள்ளார். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சைகளும், ஆயுள் காலத்தை நீட்டிக்கவும் கூடிய மருந்துகள், சிகிச்சை முறைகள், மரபணு சிகிச்சைகள், வயதாவதை தடுக்கும் வகையிலான மருத்துவப் புதுமைகள் போன்றவை ஏற்படலாம். புதிய தொற்று நோய்களின் அச்சங்களை சமாளிக்கும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றை மருத்துவத்துறை கண்டுபிடிக்கும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது, செர்னோபில் பேரழிவு போன்ற பாபா வாங்காவின் கடந்த கால கணிப்புகள் சில துல்லியமாக இருந்தன. ஆனால் அவர் எதையும் குறிப்பில் எழுதி வைக்கவில்லை. அவரது ஆதரவாளர்களால் வாய் வழியாக பரவிய செய்திகள் தான். எனவே பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் உண்மையா இல்லையா என்பது பற்றிய தொடர்ச்சியான விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவை நடக்குமா நடக்காதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.