

புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 45-க்கும் மேற்பட்ட கோவில்களில் மாற்று மதத்தினர் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதாக பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இரு முக்கிய திருத்தலங்கள் குறித்து தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டுள்ளன. திருவதரி என்று அழைக்கப்படும் பத்ரிநாதர் கோவில் வைணவத் திருத்தலங்களில் ஒன்று. அதனைப் பற்றிய திவ்யப் பிரபந்தப் பாடல்கள் தமிழில் உள்ளன. 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சைவத் திருத்தலமாகிய கேதார்நாத், பன்னிரு ஜோதிலிங்கக் கோவில்களில் முக்கிய இடம்பெற்றுள்ளது. அதனை திருஞானசம்பந்தர் அவரது தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இந்துகள் மேற்கொள்ளும் புனிதப் பயணங்களில் முக்கியமானது, இமயமலையில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களைத் தரிசிக்கும் சோட்டா சார் தாம் யாத்திரையே. எழில்கொஞ்சும் இமயமலையில் அமைந்துள்ள தொன்மையான இந்துக்கோவில்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் யாத்திரை போவது வழக்கம்.
பல நூற்றாண்டுகள் பழமையான பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களின் சுற்றுப் பகுதிகளில் உள்ள 45 கோவில்கள் இக்குழுமத்தின் கீழ் உள்ளன.
பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இந்து அல்லாதவர்கள் நுழைவதற்கான தடை கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, இக்கோவில்களில் இனி இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாற்று மதத்தினருக்கு அனுமதி கிடையாது எனவும் பத்ரிநாத், கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC) அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் கோவில் குழுமத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரவுள்ளது என்று கோவில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஹேமந்த் திரிவேதி கூறினார்.
மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் "தேவபூமி" புனிதத்தையும், பழமையான கலாச்சார மரபுகளையும் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவு குறித்தான அதிகாரப்பூர்வ தீர்மானம் கோவில் கமிட்டியின் அடுத்த போர்டு கூட்டத்தில் நிறைவேற்றப்படும். மேலும், இவ்விரு கோவில்கள் மட்டும் இல்லாமல், BKTC-ன் கட்டுப்பாட்டில் உள்ள 45 கோவில்களுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக கேதார்நாத் பாதையில் இறைச்சி மற்றும் மதுபானங்கள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்தவும், ரீல்ஸ் எடுக்கவும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, மாற்று மதத்தினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில் கமிட்டியின் இந்த முடிவை அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளன. இது பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே குளிர் காலத்திற்காக மூடப்பட்டுள்ள பத்ரிநாத் கோவில் வரும் ஏப்.23ம் தேதி திறக்கப்பட உள்ளது. கேதார்நாத் கோவில் திறப்பு தேதி சிவராத்திரி அன்று அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.