உணவு திருவிழா, புத்தக திருவிழா என்று நம் நாட்டில் திருவிழாவுக்கு பஞ்சமேயில்லை. மக்கள் ஒருசேர கூட்டமாய் கூடி கொண்டாட்டங்களை மேற்கொண்டாலே அது திருவிழாதான். அது போல், வரும் பொங்கலையொட்டி நடக்க இருக்கும் பலூன் திருவிழாவை பற்றியும் அதன் சிறப்பையும் பற்றியும் தெரிந்து கொள்வோம். அப்படி என்ன சிறப்பு இந்த பலூன் திருவிழாவில்?
உலகின் முதல் பலூன் திருவிழாவான 'Albuquerque International Balloon Fiesta' 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கியில் (Albuquerque) நடைபெற்றது. இது KOB என்னும் வானொலியின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பின் இது ஒரு கண்கவர் திருவிழாவாகவும், பலூன் கலையை மேம்படுத்தவும் உலகம் முழுவதும் பரவி பார்வையாளர்களை ஈர்க்க தொடங்கியது.
பிரமாண்டம், சாகசம் மற்றும் சமூக உணர்வின் தனித்துவமான கலவைக்காக பலூன் திருவிழாக்கள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. சூடான காற்றின் (hot air) உதவியோடு வானத்தை முழுவதுமாக நிரப்பி ஒரு வண்ணமயமான மாயாஜால சூழலை பல்லூன்கள் உருவாக்குவதால், இது ஒரு திருவிழா போன்ற கண்கவர் காட்சி அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு உணர வைக்கிறயும். இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பார்வையாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு பல வான்வழி காட்சிகளை அனுபவிக்கலாம். இது ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடும். வேறு பல கொண்டாட்டங்களையும் (ஆடல், பாடல் நிகழ்ச்சி) நம்மால் அனுபவிக்க முடியும். ஒரு மறக்க முடியாத அனுபவமாய் நினைவில் வைத்து, குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
நாமும் இதில் சேரலாமா? இந்த திருவிழாக்களில் சொந்தமாக பலூன் பறக்க ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.
முதலில், ஒரு புகழ்பெற்ற பலூன் ஆபரேட்டரைக் கண்டுபிடித்து, முன்கூட்டியே உங்களுக்கான முன்பதிவை செய்ய வேண்டும். கூடுதலாக, இதில் ஆர்வமுள்ளவர்கள் பலூனைப் பாதுகாப்பாக இயக்கத் தேவையான திறன்களையும் அறிவையும் பெற பலூன் பைலட்டிங் (balloon piloting) படிப்புகளில் சேரலாம். பின் தேவையான அனுமதிகளை பெற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் (Event coordinators) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நீங்களும் ஒரு “Balloonist” ஆக பங்குபெறலாம்.
எப்போது இதை காணலாம்? வரவிருக்கும் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா (TNIBF) ஜனவரி 10 முதல் ஜனவரி 19, 2025 வரை, சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும். இதற்கான டிக்கெட்களை tnibf.com இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு இடமும் பல்வேறு வரலாற்று பின்னணிகளுடன் தனித்துவமான அனுபவத்தை அனைவருக்கும் வழங்குகிறது. கூடுதலாக, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா போன்ற இந்தியா முழுவதும் உள்ள பிற நகரங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. இந்நிகழ்வு உலகம் முழுவதிலுமிருந்து பல பலூன் ஆர்வலர்களை ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கிறது.
ஆக, பலூன் திருவிழாவில் கலந்து கொள்வது என்பது சாகசம், சந்தோஷம் மற்றும் சமூக உணர்வை ஒருங்கிணைக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். நீங்கள் பார்வையாளர்களாக இருந்தாலும் சரி, இல்லை எதிர்காலத்தில் ஒரு பலூனிஸ்டாக (Balloonist) வர நினைப்பவர்களாக இருந்தாலும் சரி, இந்த திருவிழாக்கள் அனைத்து தரப்பினருக்கும் ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றன. எனவே இந்த நிகழ்வின் பற்றிய செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து ஒரு புது அனுபவத்தைப் பெறுங்கள்.