
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டிற்கு பெரும்பாலான மாணவர்களும், இளைஞர்களும் அடிமையாகி உள்ளனர். இதனால் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கூட செல்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கட்டி விளையாடுவதால், இலட்சக் கணக்கில் பணத்தை இழந்த சிலர் தற்கொலைக்கு முயல்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்த மசோதாவுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதன்படி ஆன்லைன் விளையாட்டு விதிமுறைகள் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை விதிமுறைகளை கொண்டு வருவதற்கு முன்பு, விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் மத்திய அரசு பலமுறை ஆலோசனை நடத்தியது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதன்படி வருகின்ற அக்டோபர் 1 முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. விதிமுறைகள் அமலுக்கு வர இன்னும் 10 நாட்களுக்கும் மேல் உள்ளதால், மீண்டும் ஒருமுறை ஆலோசனை நடத்தப்பட்டு விதிமுறைகள் அனைத்தும் இறுதியாக நிர்ணயிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அமலுக்கு வருவதற்கு முன்பு பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்படும். ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை விதிமுறைகளைத் தாக்கல் செய்வதற்கு முன்பும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதுதவிர அவகாசம் தேவையெனில், அனைவருடனும் கலந்தாலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். இதுதான் மத்திய அரசின் வழக்கமான நடைமுறை. இந்நிலையில் அக்டோபர் 1 முதல் ‘ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா 2025’ அமலுக்கு வரவுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டால் நாட்டில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதனைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் களம் கண்டுள்ளன. இதன்படி இனி ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவித்தாலும், ஆன்லைன் விளையாட்டு செயலிகளை அனுமதியின்றி செயல்படுத்தினாலும் கடுமையான தண்டனை விதிக்கப்படும். மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.