விற்பனைக்கு வரும் பெங்களூர் அணி..! போட்டி போடும் 6 முக்கிய நிறுவனங்கள்..!

RCB
RCB
Published on

நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றிய பெங்களூரு அணியை விற்க அணி நிர்வாகம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பெங்களூர் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த தொடரில், இந்திய வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஒரு சில வீரர்கள் சர்வதேச போட்டிகளை விடவும் ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் இந்த தொடரின் சந்தை மதிப்பு தற்போது பல லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் உலகளவில் பிரபலமான அணிகளாக வலம் வருகின்றன. இதில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விராட் கோலியின் 18 ஆண்டு கால தவமும் நடப்பாண்டு முடிவுக்கு வந்தது.

இதனை கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி விழாவை ஏற்பாடு செய்தது பெங்களூர் அணி நிர்வாகம். இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது. அப்போது பெங்களூர் அணியை விற்பதாக அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்து ஒன்று பரவியது. இதனை அப்போது அணி நிர்வாகம் மறுத்த நிலையில், தற்போது உண்மையாகியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.17,859 கோடியாகும். தற்போதைய ஐபிஎல் அணிகளில் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் பெங்களூர் தான் இருக்கிறது. நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை வென்றதுமே அதன் சந்தை மதிப்பு தாறுமாறாக எகிறியது.

சந்தை மதிப்பில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்நிலையில் பெங்களூர் அணியின் உரிமையாளரான ‘டியாஜியோ குழுமம்’ தனது அனைத்து பங்குகளையும் விற்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியதால், பெங்களூர் அணிக்கான வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட உசேன் போல்ட்..! ஓட்டப்பந்தய வீரரானது எப்படி தெரியுமா?
RCB

வருமானம் குறையும் போது ஆண்டு தோறும் அணிக்கான செலவு அதிகரித்து வருவதால், அனைத்து பங்குகளையும் விற்க அணி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.17,859 கோடி மதிப்புள்ள பெங்களூர் அணியை வாங்குவதற்கு இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் உட்பட மொத்தம் ஆறு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

அதானி குழுமம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான பர்த் ஜிந்தால் (JSW குழுமம்), ஆதர் பூனம்வாலா (சீரம் இன்ஸ்டிடியூட்) மற்றும் டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்களுடன் இரண்டு அமெரிக்கன் நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன. இதில் அதானி மற்றும் ஜிந்தாள் குடும்பங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய தோனி - சொன்னது என்ன?
RCB

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com