இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய தோனி - சொன்னது என்ன?

Dhoni
MS Dhoni
Published on

கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, 43 வயதிலும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசன் முடியும் போதும் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால் இம்முறை இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஏனெனில் தொடரின் நடுவிலேயே அடுத்த சீசனுக்கு வலிமையாக மீண்டு வருவோம் என தெரிவித்து விட்டார் தோனி. இருப்பினும் அடுத்த சீசன் தொடங்குவதற்கு 10 மாத காலம் இருப்பதால், அணியை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அவசியமான அறிவுரையை வழங்கி இருக்கிறார் தோனி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரையில் சென்னை அணி வலிமையான அணியாகவே கருதப்படும். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை அதிகப் போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனியின் தலைமையின் கீழ் 5 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்தாலும், அவருக்குப் பின் சரியான கேப்டனை அணி நிர்வாகம் தேர்வு செய்யத் தவறி விட்டது. இதனால் வேறு வழியின்றி இப்போதும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் தோனி.

நடப்புத் தொடரில் பாதி போட்டிகள் முடிந்த பிறகே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இளம் வீரர்கள், தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் இளம் வீரர்கள், மூத்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் கேப்டன் தோனி.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்கள் அணியில் டெவால்ட் பிரெவிஸ் சிறப்பாக விளையாடுகிறார். ரிஸ்க் எடுத்து, அதிரடியாக விளையாடி அணிக்குத் தேவையான நேரத்தில் ரன்களைச் சேர்க்கிறார். இதுதான் நாங்கள் எங்கள் அணியில் மேம்படுத்த நினைக்கும் கட்டம். ஒரு வீரர் ரிஸ்க் எடுக்கும் போது, அவுட் ஆகி விட்டால் அடுத்து வரும் வீரர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். காம்போஜ் மிகவும் அருமையாக பந்து வீசுகிறார். ஒரு பௌலர் பவர்பிளேயில் 3 ஓவர்களை வீசுவது கடினம். ஆனால் அணியின் நலனுக்காக காம்போஜ் இதனைச் செய்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஐபிஎல் தொடரின் வணிக முகமா தோனி?
Dhoni

சென்னை அணியின் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் எல்லா போட்டிகளிலும் 200+ ஸ்டிரைக் ரேட்டுடன் தொடர்ந்து விளையாடுவது கடினம். போட்டியின் எந்த நேரத்திலும் சிக்ஸர் விளாசும் திறன் இவர்களிடம் இருக்கிறது.

ஒரு போட்டியில் நன்றாக விளையாடினால், அடுத்த போட்டியில் உங்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். இந்நேரத்தில் உங்கள் மீதான அழுத்தத்தை எடுக்காதீர்கள். அதோடு பயிற்சியாளர்கள் மற்றும் மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் கிரிக்கெட்டைப் படிப்பதற்கு சமம். சென்னை மட்டுமின்றி அனைத்து இளம் வீரர்களுக்கும் நான் கூற விரும்பும் அறிவுரை இதுதான்” என தோனி கூறினார்.

இதையும் படியுங்கள்:
தோனி தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - கேப்டனாக உருவெடுத்த விக்கெட் கீப்பர்!
Dhoni

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com