

இந்தியன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு, ரெப்போ வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் மேலும் ரெப்போ விகிதம் குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆலோசனை செய்யப்படும். ரெப்போ வடடி விகிதத்தைப் பொறுத்தே வங்கிகள் பொதுமக்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைந்தால், வங்கிக் கடன்களுக்கான வட்டியும் குறையும்.
நாட்டில் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியே ரெப்போ வட்டி என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கியின் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கிக்கு கிடைத்த மேக்ரோ பொருளாதார தரவுகள், ரெப்போ வட்டி விகிதக் குறைப்பை உறுதி செய்துள்ளன. இருப்பினும் இந்த வட்டி குறைப்பு டிசம்பர் மாதத்திலேயே நடக்குமா அல்லது அடுத்து வரவிருக்கும் நிதி கொள்கை கூட்டத்தில் நடக்குமா என்பது பின்னர் தான் தெரிய வரும். எங்களின் முதல் நோக்கமே விலைவாசியை நிலைநிறுத்தி, நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பது தான்” என அவர் தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைவதன் மூலம், வீட்டுக் கடனை ஃபுளோட்டிங் ரேட் முறையில் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதம் குறையும். அதோடு புதிதாக வங்கி கடன் வாங்குபவர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.பிப்ரவரி மாதம் முதல் இதுவரையில் மொத்தம் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் பொருளாதாரம் முன்பை விட அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. மேலும் வரலாற்றில் பணவீக்கம் கடுமையாக சரிந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தனியார் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும், நீண்ட கால பொருளாதார திட்டங்களுக்கு பாதை அமைக்கவும் ரிசர்வ் வங்கி உறுதுணையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட இருப்பது, பொதுமக்களுக்கு பலனைத் தரக் கூடியதாக அமையும்.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தபோதிலும், பெரும்பாலான வங்கிகள் அதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் வழங்கவில்லை. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிகளை அணுகி, குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் முழுப் பலனையும் பெறுவது அவசியம். இல்லையெனில், கடன் சுமை குறையாமல் போகக்கூடும். மேலும், வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, மாதாந்திரத் தவணை (EMI) அல்லது கடன் செலுத்தும் காலம் ஆகிய இரண்டில் எதைக் குறைக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யலாம் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது.