
கடந்த ஓராண்டு காலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. தற்போது வரை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85,000-ஐக் கடந்த நிலையில், விரைவில் ரூ.1 இலட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றம் சாமானிய மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உலகளாவிய பொருளாதார சந்தையில் டாலரின் நிலையற்ற தன்மை காரணமாக, முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்நது உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்வு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கௌடில்யா பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், கச்சா எண்ணெயை போல் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் முயற்சி மேற்கொள்கின்றன. தற்காலத்தில் உருவாக்கப்பட்ட வர்த்தக கொள்கைகளும் ஒருசில நாடுகளின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. பங்குச்சந்தையில் கூட இதனுடைய தாக்கத்தை நம்மால் காண முடிகிறது.
புவி அரசியலின் சூழலுக்கு ஏற்ப கடந்த காலத்தில் கச்சா எண்ணெயின் விலை பலமடங்கு அதிகரித்தது. அதைப் போலவே தற்போது தங்கத்தின் விலையில் வரலாறு காணாத மாற்றங்கள் நிகழ்கின்றன. தங்கத்தின் தொடர் விலையேற்றம் சாமானிய மக்களைப் பாதித்தாலும், அதிக தங்க இருப்பைக் கொண்டுள்ள நாடுகள் வருங்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க தங்கம் தான் துருப்புச்சீட்டாக இருக்கும்” என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
கடந்த புதன்கிழமை மும்பையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகித மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆகவே தொடரும் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
சஞ்சய் மல்ஹோத்ரா பதவிக்கு வந்த பின்பு ரெப்போ வட்டி விகிதத்தை 1% வரைக் குறைத்தார். இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும், ரெப்போ வட்டியைக் குறைத்து பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.
இனி வரும் காலங்களில் கூட தங்கத்தின் விலை மேலும் உயரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது இன்றைய நிலையில் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் விலையேற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆகையால் சாமானிய மக்களும் தங்கத்தை முதலீடாக பார்த்தால், அதன் விலையேற்றத்தைக் கண்டு நிச்சயமாக அஞ்ச மாட்டார்கள்.