

நாட்டில் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால், அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் கூட ஆன்லைனில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் ஆவணங்களை ஹேக்கர்கள் எளிதாக ஹாக்கிங் செய்து, தனி நபர்களின் தகவல்களை திருடுகிறார்கள் என்பதால், இதற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் ஆவணங்கள் அதிக பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வங்கிகளில் பாதுகாக்கப்படும் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகி உள்ளன. ஏதேனும் குற்ற வழக்குகளில் சிக்கினால் டிஜிட்டல் ஆவணங்கள் நீதிமன்றங்களில் ஆதாரமாக ஏற்கப்படாது. ஏனெனில், அவை போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இனி வங்கி டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றங்களில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய அரசு.
காகித ஆவணங்களைப் பயன்படுத்தும் போது, அவற்றை நீண்ட நாட்களுக்கு பராமரிப்பது மிகவும் கடினம். இதன் காரணமாகவே காகித ஆவணங்கள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால் டிஜிட்டல் ஆவணங்களை நீதிமன்றங்களில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் சட்டத்தில் இல்லை.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் டிஜிட்டல் ஆவணங்களும் அசல் ஆவணங்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அரசு முக்கிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ‘வங்கியாளர்களின் ஆவண சாட்சிய மசோதா, 2026’ குரல் வாக்கெடுப்பின் மூலம், நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் மூலம் இனி வங்கியில் பாதுகாக்கப்படும் டிஜிட்டல் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் செல்லத்தக்க ஆதாரங்கள் ஆகும். தற்பேதைய நவீன டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப சட்டத்திலும் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
135 ஆண்டு கால சட்ட வரலாற்றில் இந்த மசோதா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தின் படி, வங்கிக் கணக்குகள் மற்றும் பதிவுகளின் காகித வடிவம் மட்டுமின்றி கணினி பதிவுகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், பிளாக்செயின் மற்றும் கிளவுட் உள்ளிட்ட டிஜிட்டல் சான்றுகள் இனி அதிகாரப்பூர்வ சாட்சியாக நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த சட்டத்தின் மூலம் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது வங்கி அதிகாரிகள் நேரில் வர வேண்டிய அவசியம் இனி இருக்காது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 135 ஆண்டுகளுக்கு முந்தைய ‘வங்கியாளர்களின் ஆவண சாட்சிய சட்டம், 1891’ காலாவதியாக்கப்பட்டு, இதற்கு பதிலாக தற்போது புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் சட்டத் திருத்தம், டிஜிட்டல் ஆவணங்களுக்கு நீதிமன்றங்களில் முழுமையான சட்டப் பாதுகாப்பை வழங்கும். இதன் மூலம் நிதித் துறை சார்ந்த நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடிக்கப்படும். அதோடு டிஜிட்டல் முறைகேடுகளைத் தடுக்கவும் இது உதவும்.
காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட இந்த மசோதாவானது, வருங்காலத்தில் வங்கி சேவைகளில் மட்டுமின்றி, பிற நிதித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் உதவும் வகையில் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது. இந்த மசோதாவின் மூலம் டிஜிட்டல் ஆவணங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் இனி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.