
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் அங்கு தங்கியிருந்து பணியாற்றுவார்கள். பின்னர் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள்.
அதுபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், கடந்தாண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அவருடன் மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் சென்றார்.
அங்கு அவர்கள் 8 நாட்கள் மட்டுமே பணி செய்துவிட்டு திரும்ப வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, 8 நாட்கள் மட்டுமே ஆய்வு பணிக்காக சென்ற சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் பூமிக்கு திரும்ப அழைத்துவர எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் பல்வேறு காரணங்களால் தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் எலான்மஸ்க் தனது நிறுவனம் மூலம் சுனிதா வில்லியம்சை அழைத்துவர சம்மதம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. குரு டிராகன், திட்டமிட்டபடி சர்வதேச விண்வெளியை அடைந்து, அங்கு அது விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.
இதனை தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் மீட்பு குழுவினரும் குரு டிராகன் விண்கலத்துக்குள் வந்தனர். முன்னதாக விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கியிருந்த, அங்கிருந்த வீரர்களை சுனிதா உள்ளிட்டோர் கட்டி அணைத்து பிரியா விடை கொடுத்தனர். அவர் அங்கிருக்கும் சக வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் திட்டமிட்டபடி குரு டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது. அதன்பிறகு அது பூமியை நோக்கி பயணித்தது.
அதனை தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது. சற்றுத் தொலைவில் படகுகளில் காத்திருந்த மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டனர். விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.