விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
எலோன் மஸ்க்கிற்கு போட்டியாக வந்த போயின் நிறுவனம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப 'ஸ்டார்லைனர்' எனும் விண்கலத்தை தயார் செய்திருந்தது. அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் வில்மோர் ஆகியோர் பூமியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தனர்.
அங்கு ஆய்வை முடித்த பிறகு 10 நாட்களில் திரும்ப வேண்டும் என்பதுதான் ப்ளான். ஆனால், சென்ற ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. ராக்கெட்டில் மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அந்த பிரச்சனையை சரி செய்ய இருவரும் இதுவரை முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், முடியவில்லை. ஆட்கள் இல்லாமல் வெறும் ஸ்டார்லைனர் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியிலேயே சிக்கிக்கொண்டனர். இன்னும் அவர்கள் எப்போது வருவார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது.
இப்படியான நிலையில், விண்வெளியில் இருந்துக்கொண்டு சுனிதா வில்லியம்ஸ் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். அங்கு அவர்கள் சில பணிகளை செய்துக்கொண்டு வருகின்றனர். ரேடியோ தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளுக்காக விண்வெளியில் ஸ்பேஸ்வாக் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் சுமார் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்துள்ளார். இதுவரை 9 முறை ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்துள்ளார்.
இதன்மூலம் விண்வெளியில் அதிக நேரம் ஸ்பேஸ் வாக் செய்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இப்படி சுனிதா வில்லியம்ஸ் அங்கு நாளுக்கு நாள் சாதனையை செய்து வந்தாலும், மேலும் பல நாட்கள் அங்கு தங்குவது இயலாத காரியம்தான். இதனால், சில நாட்கள் முன்னர், அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர சொல்லி எலோன் மஸ்க்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு ஜோ பைடன் அரசில் இரண்டு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலமாக சிக்கித் தவித்து வருவது கொடூரமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.