
தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த முடியாமல் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்கள் சரிவர உணவு கிடைக்காத வெறியில் ரோட்டில் தனியாக வருபவர்களையும், குழந்தைகளையும் குறிவைத்து கும்பலாக சேர்ந்து கொண்டு தாக்கும் சம்பவங்கள் நாள்தோறும் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் தான் உள்ளது. இதனால் அந்தத் தெரு நாய்கள் கடித்து பலர் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுக்கும் எந்த முயற்சியும் பலன்தரவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் பெங்களூருவில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த புதுவிதமான திட்டத்தை மாநகராட்சி கொண்டு வர உள்ளது.
இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் இன்று உலக அளவில் பெங்களூரு மிகவும் பிரபலமான மாநிலமாக திகழ்கிறது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும், பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர்.
தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் ஒரு காலத்தில் பூங்கா நகரம் என அழைக்கப்பட்ட பெங்களூரு, தற்போது கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. இந்தளவு நெருக்கடி மாநிலமாக பெங்களுரு மாறிவருகிறது.
பெங்களூரு தொழில், கல்வி, வேலைவாய்ப்பில் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்து வந்தாலும், தெருநாய்கள் தொல்லை அங்கு தீர்க்க முடியாத பெரும்பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அங்கு தெருநாய்களின் தொல்லை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ரோடுகளில் அலையும் இந்த தெருநாய்கள் தனியாக வரும் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை வெறிகொண்டு தாக்கி வருகிறது. இப்படித்தான் கடந்த சில மாதத்திற்கு முன்பு 70 வயது மூதாட்டி தெருநாய்கள் கடித்து குதறியதில் அவர் உயிரிழந்தார். பெங்களூருவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் 7,000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. அதேபோல் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெருநாய் தொல்லை மற்றும் அவற்றை கட்டுப்படுத்த முடியாதது அந்த மாநில அரசுக்கு தீரா தலைவலியாகவே மாறியுள்ளது என்றே சொல்லலாம்.
இப்படி தெருநாய்கள் ரோட்டில் அலைவதற்கும், அனைவரையும் கடிப்பதற்கும் முக்கிய காரணம் அவற்றுக்கு போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைக்காததே என்று கருதிய பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது தெருநாய்களுக்கு ‘சிக்கன் ரைஸ்’, ‘எக் ரைஸ்’ என விதம் விதமான அசைவ உணவு வழங்க முடிவு செய்து இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்தை செலவிடவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டும் இதேபோல் பெங்களூரு மாநகராட்சி தெருநாய்கள் மனிதர்களை கடிக்காமல் இருப்பதற்காக சைவ உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பலர் உதவிக்கரம் நீட்டிய போதிலும் இந்த திட்டம் பலனளிக்காமல் தோல்வியில் முடிந்தது. தற்போது அசைவ உணவு வழங்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள மாநகராட்சி இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்களுக்கு அசைவ உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவிச்சாலும், மனிதர்கள் ஒரு வேளை சாப்பாடுக்கே கஷ்டப்படும் போது, தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக்ரைஸ் கொடுப்பதா என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படி ருசியான உணவு கொடுத்தால் தெருநாய்களின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும் என்றும் இன்னும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படியே, தினமும் ‘அசைவ விருந்து’... தெருநாய்களுக்கு இனி கொண்டாட்டம் தான் போங்க...