
வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி 17வது ஆசிய கோப்பை துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை நேற்று அறிவித்தது பிசிசிஐ. இந்திய டி20 அணியில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் இடம் பிடித்துள்ளார் சுப்மன் கில். மேலும் இவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சப்மன் கில்லை அணிக்குள் கொண்டு வர இரண்டு இளம் வீரர்களுக்கு பிசிசிஐ துரோகம் செய்து விட்டதாக தமிழக வீரர் அஸ்வின் தனது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் சுப்மன் கில் கடைசியாக விளையாடி இருந்தார். டி20 உலக்கோப்பைக்குக் கூட இவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் திடீரென துணை கேப்டன் பதவி சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில்லின் வரவால் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்காமல் போனதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லிற்கு ஆதரவாக பிசிசிஐ செயல்படுகிறது. அவருக்காக நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயரை அணியில் சேர்க்கத் தவறிவிட்டது பிசிசிஐ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தான் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சுபமன் கில்லின் வரவு சஞ்சு சாம்சனுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தொடக்க வீரராகவே களமிறங்குகிறார். அதோடு சுப்மன் கில்லிற்கு முன்பு துணை கேப்டனாக இருந்த அக்சர் படேலின் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து சூர்யகுமார் யாதவுக்கு மாற்றப்பட்டது. அதேபோல் இம்முறை துணை கேப்டன் பதவியும் மாற்றப்பட்டுள்ளது.
ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவாக பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், “மிகச் சிறந்த ஃபாரமில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயரை பிசிசிஐ தேர்வு செய்யாமல் இருப்பது அநியாயம். கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் இரண்டு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதில் ஒருமுறை கோப்பையையும் கைப்பற்றி இருக்கிறார். ஷார்ட் பால் பிரச்சினையையும் இப்போது சரி செய்திருக்கும் ஐயர், பும்ரா மற்றும் ரபாடா பந்துவீச்சையும் திறமையாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தார். சுப்மன் கில்லை அணியில் சேர்க்க ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு அநியாயம் செய்து விட்டது பிசிசிஐ. இவர்கள் இருவருக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் அணிக்குத் தேர்வாகியுள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா.