
ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டில் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்குத் தயாராகும் வகையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். அடுத்த ஆண்டு டி20 உலக்கோப்பைத் தொடர் நடைபெற இருப்பதால், இம்முறை ஆசிய கோப்பையும் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது.
இதுவரை இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையைக் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டு நடைபெறவிருக்கும் 17வது ஆசிய கோப்பையைக் கைப்பற்றப் போவது எந்த அணி என்பதை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தெடருக்குப் பின் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமனில் முடித்ததன் மூலம், இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் இந்திய வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது.
சிவப்பு நிறப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவது போலவே, வெள்ளை நிறப் பந்து கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இதனால் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பையை இந்தியா வெல்லும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிலும் துபாய் போன்ற ஆடுகளங்களில் இந்திய அணியை எதிரணிகள் வீழ்த்துவது அவ்வளவு சுலபமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விரைவில் ஓய்வு பெறுவார்கள் என்ற தகவல் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த கங்குலி, “கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவருமே அக்டோபரில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அவர்கள் இருவருமே தொடர்ந்து விளையாட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் இருவருமே பல சாதனைகளைச் செய்துள்ளனர். இருவருக்கும் ஆஸ்திரேலியா தொடர் தான் கடைசியா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் இருவரது தேவையும் இந்திய அணிக்கு உள்ளது. வயதைக் காரணம் காட்டாமல், திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும். 2027 உலக்கோப்பையில் சீனியர் வீரர்களின் அனுபவமும் தேவை என்பதை தேர்வுக்குழு உணர வேண்டும்” என்று கங்குலி கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான தேர்வு விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனால் கங்குலி மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் நுழைவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “உறுப்பினர்கள் விரும்பினால் மட்டுமே பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு நான் வேட்பு மனுத் தாக்கல் செய்வேன். இல்லையெனில் நான் போட்டியிட மாட்டேன்” என சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
செப்டம்பர் 9 முதல் 28 வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவிருக்கிறது. இதில் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. சமீபத்தில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதிப் போட்டியில் இந்தியா விளையாட மறுத்து விட்டது. அதேபோல் ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாடக் கூடாது என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அறிவிப்புகள் ஆசிய கோப்பை தொடங்கும் போது தான் தெரிய வரும்.