
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று அழைப்பார்கள். சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டிருந்தாலும், குடும்பம், பைக் ட்ரிப், கார் ரேஸ் என தனக்கென தனி பாதையை வகுத்து அதில் பயணித்து கொண்டிருப்பவர்.
சினிமா ஒரு பக்கம் என்றால் மற்றொருபுறம் ரேஸிங்கிலும் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார் அஜித். கார் பந்தய வீரரான அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பு பல கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ஏற்பட்ட காயத்தால் கார் ரேஸிங்கில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார். இதற்கிடையே இப்போது மீண்டும் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் துபாய் 24 மணி நேர கார் ரேஸிங்கில் கலந்து கொண்ட இவரது ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 53 வயதான அஜித்குமார் சாதனைக்கு வயது தடையல்ல என்பதை இதன் மூலம் நிறுபித்தார்.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்து கௌரவித்தது.
தற்போது இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தய போட்டியில் பங்கேற்கவும் அஜித்குமார் தனது அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். பயிற்சியின்போது விபத்திலும் சிக்கினார்.
பயிற்சியின் போது அஜித்குமார் அளித்த பேட்டியில், “துபாய் கார் பந்தயத்துக்கு பிறகு மீண்டும் போட்டியில் களம் இறங்கி இருப்பது மகிழ்ச்சி. தொடர்ச்சியான போட்டிகள் அனுபவத்தை அளித்துள்ளன. கார் பந்தயத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு வருகிறேன். ஒரு அணியின் வீரராக உரிமையாளராக இருப்பது கவுரவம். கார்பந்தயத்தில் இன்னும் பல ஆண்டுகள் ஈடுபட விரும்புகிறேன்'' என்றார்.
இந்த நிலையில் 12ஹெச், அதாவது 12 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி பங்கேற்றது. இதில் GT992 பிரிவில் களமிறங்கிய அஜித் குமாரின் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. துபாயைத் தொடர்ந்து இப்போது இத்தாலியிலும் 3வது இடம் பிடித்து கெத்து காட்டியுள்ளார் அஜித்குமார். மேடையில் தேசிய கொடியுடன் சென்று அஜித்குமார் பரிசை பெற்றுக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குத் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் அஜித்துக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம்தேதி வெளியான நிலையில் பெரிய அளவில் வசூல் வேட்டை செய்யவில்லை என்றாலும் நஷ்டம் என்ற அளவிற்கு இல்லை என்றே கூறப்படுகிறது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' படம் வரும் ஏப்ரல் 10-ம்தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் இந்தியாவில் மட்டும் சுமார் 3,000 முதல் 4,000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கார் ரேஸில் பங்கேற்பதற்காக அஜித் அவசர அவசரமாக, 'குட் பேட் அக்லீ' மற்றும் 'விடாமுயற்சி' திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து கொடுத்தார்.
அக்டோபர் மாதம் வரை அஜித் தொடர்ந்து கார் ரேசிங்கில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாக முன்னரே அறிவித்துள்ளார். அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டு சாதனை படைப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.