
தமிழகத்திற்கு முக்கிய மாவட்டங்களில் உருவாகும் பொருட்களுக்கு வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் காஞ்சிபுரம் பட்டு புடவை, திருப்பூர் ஆடை, தஞ்சாவூர் வெண்கலச் சிலைகள், மாமல்லபுரத்தில் செய்யப்படும் பித்தளை, கல், மர கைவினை பொருட்களுக்கு சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பு உள்ளது.
இவ்வாறு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாகும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் குறைந்துள்ளதால் இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு லாபம் கிடைப்பதுடன், தமிழகத்திற்கும் இதன் மூலம் அதிகளவு வருவாய் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில், ஜி.எஸ்.டி. குறைப்பால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உருவாகும் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது, இதனால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது. என்னென்ன பொருட்களுக்கு எந்த விகிதத்தில் ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு விகிதம் அமலுக்கு வர உள்ளதால், மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் 5 சதவீதத்துக்குள் வந்ததால், அவர்களின் மாதாந்திர பில் தொகையில் 13 சதவீதம் மிச்சமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மருந்துகள் அனைத்தும் 5 சதவீத வரிக்குள் வந்துள்ளதுடன், புற்றுநோய், அரிய நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்துறை மற்றும் காஞ்சீபுரம் பட்டு
தமிழகத்தின் ஜவுளித்துறை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், ‘இந்தியாவின் பின்னலாடை தலைநகர்’ என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் வேலை செய்கின்றனர். அந்த வகையில் திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து உற்பத்தியாகும் குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தயாராகும் காஞ்சிபுரம் பட்டு உலகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரம் பட்டுக்கு தேவையான ஜரிக்கு, ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், அதன் மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறைவதுடன், பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும். இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதேபோல் ஜிஎஸ்டி வரிக்குறைப்பால், மதுரை ஸ்பெஷல் சுங்குடி பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவான விலையில் கிடைக்கும்.
சிலைகள் மற்றும் கைவினை பொருட்கள்
தஞ்சையில் இருந்து ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிலான வெண்கலச் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் தற்போது ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.
தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரையும், தஞ்சை, சேலம், காஞ்சீபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் பாரம்பரிய பொம்மைகள், 5 சதவீத ஜி.எஸ்.டி.யாக குறைந்ததால் சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்படும் நார்களால் ஆன தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலை 6 முதல் 7 சதவீதம் குறைவதுடன், உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும்.
ஆவின் பால் பொருட்கள்
ஆவின் பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவற்றின் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும். ஆவினில் தினமும் 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டேஷனரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்
சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அங்கிருந்து கிடைக்கும் நோட்டு புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் மூலம் கிடைக்கும் டிவி, மானிட்டர் போன்ற பொருட்களின் விலை 18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும்.
மீன்பிடித் துறை
தமிழகத்தில் உள்ள 10.48 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் குறைந்ததுடன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும் என்று கூறப்படுகிறது.
வாகன உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறை
இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகிக்கும் தமிழகத்தில், 22 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். வானங்களுக்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைந்துள்ளதால் வாகன விலை 8 சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல், சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்களில் இருந்து உருவாக்கப்படும் ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் போன்றவற்றிற்கு தற்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலை குறைந்து உற்பத்தி அதிகரிக்கும்.
இதன்மூலம், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகத்திற்கு அதிகளவு வருவாய் கிடைக்கும் என்பதுடன், அந்தந்த தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.