வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழ்: ரூ.5 லட்சம் அவுட் - அதிரவைக்கும் புதிய மோசடி!

பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு போலி திருமண அழைப்பிதழ் APK-ஐத் திறந்ததால் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
fake WhatsApp wedding invite
fake WhatsApp wedding inviteImage credit- AI Image
Updated on

பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு போலி திருமண அழைப்பிதழ் APK-ஐத் திறந்ததால் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். தீங்கிழைக்கும் APK கோப்புகள் மோசடிக்கு வழிவகுத்து, வங்கிக் கணக்குகளைக் காலி செய்துவிடும் என்ற தொடர்ச்சியான எச்சரிக்கைகளை தொடர்ந்து தற்போது அரங்கேறியுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி எந்த அளவிற்கு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறதோ அதே அளவிற்கு சைபர் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று திருமணத்திற்கு அழைத்த நிலை மாறி, இன்று வாட்ஸ்அப்பில் பத்திரிக்கையை அனுப்பும் நிலைக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது.

பெங்களூருவில் உள்ள ஒரு தொழிலதிபர் தனக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த திருமண அழைப்பிதழை திறந்த அடுத்த நொடியே அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் மாயமாகி உள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க...

பெங்களூருவின் நயந்தஹள்ளியில் வசிக்கும் 42 வயதான மரச்சாமான்கள் கடை உரிமையாளரான அந்தப் பாதிக்கப்பட்டவருக்கு, தனக்குத் தெரிந்த ஒருவரின் மொபைல் எண்ணிலிருந்து ‘Wedding APK Invitation’ என்ற தலைப்பில் APK கோப்பு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?
fake WhatsApp wedding invite

‘Wedding APK Invitation’ என்று குறிப்பிட்டு அதற்கு கீழே ‘எங்கள் திருமணத்திற்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி. விழாவின் முழு விவரங்களையும் அறிய, இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழைப் பதிவிறக்கம் செய்யவும். உங்கள் வருகையும் ஆசீர்வாதங்களும் எங்கள் சிறப்பு நாளை உண்மையிலேயே மறக்க முடியாததாக மாற்றும்’ என இமோஜ்களுடன் மெசேஜ் இருந்தால் அதை உண்மையான திருமண அழைப்பிதழ் என்று நம்பி தனது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் (Download) செய்துள்ளார்.

அந்தக் கோப்பு திறக்கப்பட்ட உடனேயே, மோசடியாளர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல் சாதனத்தை ரிமோட் முறையில் அணுகியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கோப்பு பதிவிறக்கம் செய்யப்பட்ட உடனேயே, பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து அவருக்குத் தெரியாமல் பல அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து சில நிமிடங்களில் ரூ.5,00,440 காணாமல் போனது. ஏதோ தவறு நடந்திருப்பதை அவர் உணர்ந்து தனது கணக்கைச் சரிபார்ப்பதற்குள், பணம் ஏற்கெனவே திருடப்பட்டிருந்தது.

பதிவிறக்கம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே பாதிக்கப்பட்டவரின் வங்கி விவரங்கள், பின் நம்பர் என அனைத்தையும் திருடிய மோசடி கும்பல், அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.5,00,440-த்தை திருடியுள்ளனர். பணம் டெபிட் செய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் வருவது போல இவருக்கும் ஒரு மெசேஜ் வந்ததை பார்த்த பிறகே தான் ஏமாந்ததை அவர் உணர்ந்துள்ளார்.

உடனடியாக பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து பாரதிய நியாய சம்ஹிதாவின் (BNS) பிரிவு 318-ன் கீழ் மோசடி செய்ததற்காகவும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66C மற்றும் 66D பிரிவுகளின் கீழ் அடையாளத் திருட்டு மற்றும் கணினி வளங்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடிக்காரர்களைக் கண்டறியவும், பணப் பரிவர்த்தனையின் தடத்தைக் கண்காணிக்கவும் காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், APK கோப்பின் மூலம் மற்றும் அது அனுப்பப்பட்ட கைபேசி எண் குறித்தும் விசாரித்து வருகிறது.

இணையக் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றுவதற்குத் தொடர்ந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர் என்பதையும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதுபோன்ற மோசடிகளுக்குப் பலியாகாமல் இருக்க, அறியப்படாத மூலங்களிலிருந்து வரும் இணைப்புகள் எவ்வளவு நம்பும்படியாகத் தோன்றினாலும், அவற்றை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.

சந்தேகத்திற்கிடமான நிதிச் செயல்பாடுகளை, 1930 என்ற தேசிய இணையக் குற்ற உதவி எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையக் குற்றப் புகார் இணையதளம் வழியாகப் புகார் அளிப்பதன் மூலமாகவோ உடனடியாகத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! வாட்ஸ்அப்பில் உலா வரும் ‘கோஸ்ட் பேரிங்’ மோசடி..!
fake WhatsApp wedding invite

இதுபோன்ற சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்க, வாட்ஸ்அப், குறுஞ்செய்தி (SMS) அல்லது டெலிகிராம் வாயிலாகப் பெறப்படும் APK கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், குறிப்பாக ".APK" என முடியும் எந்த ஒரு ஃபைலும் போலியாக இருக்கலாம் என்பதால் மெசேஜ் வந்த உடனேயே டெலிட் செய்வது நல்லது என்றும் Google Play Store அல்லது Apple App Store போன்ற நம்பகமான மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளை நிறுவ வேண்டும் என்றும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் பயனர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com