

பெங்களூருவில் உள்ள ஒரு பப்பில் தான் ஆர்டர் செய்த உணவு, எதிர்பார்த்ததை விட மிகவும் எளிமையாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த ஒருவரின் சமூக ஊடகப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவல் தகவல் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல் வெளிநாடுகளில் உள்ளது போல உயர்தரமான கேளிக்கை விடுதிகளும்(பப்) ஏராளமாக இருக்கின்றன. ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உள்பட பலரும் இந்த பப்புகளுக்கு அடிக்கடி சென்று பொழுதை போக்கி வருவது வாடிக்கை.
இந்த நிலையில் சமீபத்தில் அருண்ராஜ் பட்டார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திரா நகரில் உள்ள மிகவும் பிரபலமான பப்புக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த மெனு கார்டை பார்த்த அவர், ‘சில்லி டஸ்டட் கோல்டு பிங்கர்ஸ்’ (Chilli-Dusted Goldfingers) என்ற தின்பண்டத்தை ஆர்டர் செய்துள்ளார். அந்த மெனு கார்டில் அந்த தின்பண்டத்தின் விலை ரூ.150 என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அந்த உணவைப் பற்றிய விளக்கத்தில், ‘பழைய பெங்களூரின் அரிசியால் செய்யப்பட்ட, எண்ணெயில் பொரித்த தெருவோரச் சிற்றுண்டி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அருண்ராஜ் ஆர்டர் செய்த தின்பண்டம் வந்தபோது அதனை பார்த்த அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் சாதாரண ரோட்டோர பெட்டி கடைகளில் விற்கப்படும் 5 ரூபாய் போட்டி அப்பளம்(Boti Appalam) ரூ.150க்கு விற்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர், உணவு வகையின் விலை ரூ. 150 எனக் குறிப்பிட்டிருந்த உணவுப் பட்டியலின் (menu) படத்தையும், போட்டி அப்பளத்தின் படத்தையும் அந்தப் பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் புகைப்படத்தின் கீழே ‘என் பரம்பரையில் இதற்காக (Boti Appalam) 150 ரூபாய் கொடுத்த முதல் நபர் நான்தான், ஆனால் இதுபோன்று ஏமாற்றப்பட்ட முதல் ஆள் நான் இல்லை என்பதும் எனக்கு தெரியும்’ என்று பதிவிட்டிருந்தார். அங்கு நான் இதை ஆர்டர் செய்தபோது, அவர்கள் எனக்குக் கொண்டு வந்து கொடுத்தது இதுதான், என்று பரிமாறப்பட்ட உணவைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருந்தார்.
ஃபிரையம்ஸ் (Fryums) என்பவை பொதுவாக அன்றாட தின்பண்டங்களுடன் தொடர்புடையவை. வழக்கமாகவே இந்த வகையான தின்பண்டங்கள் மிகவும் குறைந்த விலை கொண்டவை.
உணவகப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த விளக்கப் பெயருக்கும், உண்மையில் பரிமாறப்பட்ட உணவுக்கும் இடையிலான முரண்பாடு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதேசமயம், உணவக ஊழியர்களிடம் இது தொடர்பான சந்தேகத்தை எழுப்பினாரா என்பது குறித்து அந்தப் பயனர் எதையும் குறிப்பிடவில்லை.
எந்தவித ஆடம்பரமான அலங்காரமும் இல்லாமல் அந்த தின்பண்டத்தை காட்டும் இந்தப் புகைப்படம் மற்றும் அவரின் பதிவு இணையத்தில் வேகமாக வைரலான நிலையில் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் நகைச்சுவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
ஒரு பயனர், ‘இங்கே எங்களுக்கு இது வெறும் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது’ என்று எழுதியிருந்தார்.
மற்றொரு பயனர், ‘சில போட்டி அப்பளத்திற்காக ஒருவர் 150 ரூபாய் கொடுப்பதை நேரில் பார்க்கும் முதல் நபர் என் பரம்பரையிலேயே நான்தான்’ என்று கூறியுள்ளார்.
இவ்வாறு பல்வேறு பயனர்களும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.